நவராத்திரி விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை நாள் முதல் நவமி நாள் வரையுள்ள ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமை 26ஆம் திகதி (நேற்று) யோகத்தில் ஆரம்பமாகி ஒக்டோபர் 04ஆம் திகதி விஜயதசமி மற்றும் கேதாரகௌரி விரதத்தின் தொடக்க நாளில் நிறைவடைகின்றது ,
பத்து நாட்கள் வருகின்ற நவராத்திரியில் துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதிக்கு கும்ப பூசை விசேடமாக இடம்பெறும். இப்பூஜையானது மூன்று தேவியருக்கும் செய்யப்படுகின்றது. சரஸ்வதிக்குரிய தினங்களை மூலநட்சத்திர நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும்.
மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெற்றாள். மகிஷம் என்றால் எருமை. இது சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும்.
அறியாமையை அழித்த அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் நம்மைச் சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் விலக அம்பிகையை இரவு நேரத்தில் பூஜை செய்கிறோம். நவராத்திரியின் சிறப்பாக கொலுவைத்தல் அமைகின்றது.
இருள் விலகி ஒளி பிறந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடுகிறோம். ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகிறது. பகலும் இரவும் இல்லாவிட்டால் நாள் என்பது கிடையாது. இரவெல்லாம் விழித்திருந்து உலகைக் காக்கும் அம்பிகைக்காக ஒன்பது நாள் இரவு மட்டும் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பர்.
படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்துக்கும் மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள் அவளே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம்பொருள் பராசக்தியே. தினமும் அம்பிகையை வணங்கினாலும் புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும். புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும்.
முக்குணங்களுக்கும் மூலமான சர்வலோக நாயகியை ஒன்பது நாட்களும் பூஜிக்கும் போது, முதல் மூன்று நாட்கள் துர்கா பரமேஸ்வரியையும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியையும் வணங்க வேண்டும்.
கல்வி,இசை,புகழ்,செல்வம்,தானியம்,வெற்றி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள். ஆதிபராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.லட்சுமி வடிவில் தரிசித்தால் செல்வம் பெருகும். சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும். எனவேதான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள். தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப்பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.
இதற்குக் காரணம், தேவியால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக ஆகும். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி,லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மனி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர்.
எனவே சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம். அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய மூவரின் முன்னிலையில்தான் 9நாட்களிலும் விரதம் மேற்கொள்கின்றனர். விரதம் மேற்கொள்ளும் போது மனிதர்களின் தீய குணங்களான வெறுப்பு,பொறாமை, அறியாமை,பேராசை,போன்ற அனைத்து குணங்களையும் மனதில் இருந்து நீக்கிவிட வேண்டும்.
No comments:
Post a Comment