திரு.மகேசன் செல்வராசா
(அப்பன்)
எங்கள் கிராமத்தின் மிகவும் ஒர் பற்றாளனை இழந்து தவிக்கின்றோம். எங்கள் கிராமத்துக்கே உரிய பண்புகளுடன் உழைத்த ஒர் துடிப்புமிக்க மைந்தனை காலனவன் தனது காலடிக்குள் கொண்டு சென்று விட்டான். "அப்பன்" என்று உறவுகள், ஊரவர், நண்பர்களால் அழைக்கப்பட்ட உறவொன்று எம்மைவிட்டு மீளாத துயில் கொள்கின்றது.
உதவி என்று எவர் கேட்டாலும் உதறி தள்ளாத உள்ளம். ஊரின் மீதும், உறவுகள் மீதும் அளவு கடந்தபாசம். எங்கள் கிராமத்தில் இடம்பெறும் நன்மை, தீமை என்ற எந்த நிகழ்வானாலும் தன் வீட்டு நிகழ்வாக எண்ணிடும் உயர்ந்த பண்பு, அந்த நிகழ்வுகள் அரங்கேறி முடியும் வரை உழைப்பு, உறக்கமின்றி உழைத்திடும் பாண்பு.எதிரியோ, நண்பனோ, ஊரோ, உறவோ, அயலவரோ எவர் மீதும் பாகுபாடுகாட்டாத பண்புள்ளம்.
எமது ஊரின் பாடசாலையாகட்டும், நூல் நிலையமாகட்டும், ஆலயம்கள் இவற்றில் எல்லாம் பொறுப்புகள் ஏற்று பொறுப்புடன் செயலாற்றிய பொறுப்பு மிக்க மாந்தர்.
கடின உழைப்புடன் அவரது சமூகம் சார்ந்த பார்வைகள் அளப்பரியவை, இந்த பண்புகள் எல்லாம் எம் கிராமத்தின் முன்னோர் எமக்கு விதைத்து விட்ட விதைகள். அவற்றில் ஒன்றே எங்கள் அப்பன் என்று வாஞ்சையோடு வசீகரிக்கும் திரு. செல்வராசா.
வாழ்க்கையின் காலத்தை இன்னும் வசீகரிக்கும் காலத்தில் எம்மையும், எம் உறவுகளையும் இவ்வளவு விரைவாக விட்டு சென்றது ஏனோ எம் “அப்பன்"னே. மிகவும் இளவயதிலேயே எம் கிராமத்து இளைஞர்கள் நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் புலம்பெயர் நாடுகளில் அடைக்கலம் கோரிய போதும் எம் முதியவர்களையும்,உறவுகளையும், கிராமத்தையும் காத்திட்ட பாதுகாவலர்களில் பிரதான பக்காளியாக செயலாற்றிய செயல்வீரன்.
எங்கள் பாசத்திற்குரிய தம்பி எம்மை விட்டு சென்றாலும் எங்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்வாய், நீ விதைத்து விட்டு சென்ற பணிகளும் செயற்பாடுகளும் என்றும் அவற்றை சுமந்து நிற்கும். எங்கள் அப்பனின் இழப்பால் துவண்டு நிற்கும் குடும்பத்தார் உறவுகளுடன் நாமும் எமது துயர் நிறைந்த அஞ்சலியை செலுத்தி நிற்கிறோம்.
சாந்தி! சாந்தி! சாந்தி!
- மண்ணின் மைந்தன் (எம்.எஸ்)

No comments:
Post a Comment