வடமராட்சியின் உடுப்பிட்டி பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பலொன்று கூண்டோடு மாட்டியுள்ளது.அதேவேளை இவ் கும்பல் பாடசாலை மாணவர்களிற்கான போதை பொருள் வினியோகத்தில் ஈடுபட்டு வியாபாரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
ஊரடங்குவேளையில் உடுப்பிட்டி பகுதியில் உள்ள வியாபாரநிலையமொன்றில் இருந்து சிகரெட் மற்றும் தொலைபேசி நிரப்பு அட்டைகளை திருடிய குற்றவாளிகளை தேடி வல்வெட்டித்துறை பொலிசார் வலை விரித்து வந்த நிலையிலேயே இவ் மிகப்பெரும் கொள்ளை கும்பல் சிக்கியுள்ளது.
தமது சுகபோகவாழ்க்கைக்கு வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பல், அந்த பணத்தில் பெருமளவு போதைப்பொருளை கொள்வனவு செய்து அதனை வகை தொகையின்றி பாடசாலை மாணவர்களிற்கு இலவசமாக வினியோகம் செய்து மாணவர்களை போதைக்கு அடிமையாக்கியுள்ளது.
வீட்டில் தனித்திருந்த பொண்களை தாக்கி சுமார் 45 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டமை, மற்றும் பகல் வேளையில் வீட்டின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பல பொருட்களை திருடியமை தெரியவந்துள்ளது. கடந்த 3மாத காலப்பகுதியில் இடம்பெற்ற 8கொள்ளை சம்பவங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்ற பாரிய கொள்ளை சம்பவங்கள் தொடர்பிலும் மேலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கொள்ளை கும்பலை சேர்ந்த நபர் ஒருவர் திருடிய பணத்தில் மாடி வீடு, கடைத்தொகுதியென்பனவற்றிற்காக முதலிட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி பகுதியில் இடம்பெற்ற கொள்ளைகளையடுத்து சந்தேக நபர் ஒருவரை தேடி பொலிசார் வலைவிரித்த நிலையில் மேற்படி சந்தேக நபர் இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைய சென்றபோது அவரை ஏற்றுக்கொள்ளாமல் ஆணையக அதிகாரிகள் திருப்பி அனுப்பியநிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வழங்கிய தகவலின் பிரகாரமே இவ் கொள்ளை குழு சிக்கியது.
இவர் வழங்கிய தகவலின் பிரகாரம் யாழ் உடுப்பிட்டி வீதியில் வைத்து மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் சிலரை பொலிசார் தேடி வருகின்றனர்.
இதேவேளை மேற்படி கொள்ளை கும்பலிடம் இருந்து திருட்டு நகைகளை பவுண் ஒன்று 15ரூபா வீதம் வாங்கியமை தொடர்பில் நகைக்கடவை உரிமையாளர் ஒருவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டமை குறித்த விசாரணையை மேற்கொள்ளுமாறும் கல்வி சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:
Post a Comment