திரு. செல்லைய்யா குலேந்திரன் (குலம்)
சோளங்கன் /ஐக்கிய அமெரிக்கா (USA)
யாழ் கரணவாய் மேற்கு சோளங்கனை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்லைய்யா குலேந்திரன் அவர்கள் இன்றைய தினம்(01.04.2020) நியுயோர்க்கில் இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.
சோளங்கன் சனசமூக நிலையத்தின் முன்னை நாள் செயலருமான செல்லைய்யா குலேந்திரன், குலம் அண்ணா என்று சிறுவர்களாலும் குலம் என்று நண்பர்கள், பெரியோர்களாலும் அன்பாக அழைக்கப்பட்டவர்.
குலம் என்ற பெயருக்கே உரிய அவரது குணம் அளவிட முடியாத அன்பும், பண்பும் கொண்டது.. நாம் எல்லாம் அவருக்கு சிறுவார்களாக இருந்த போதும் கடும் சொல் அல்லது வார்த்தை பிரயோகம் கொண்டு அழைக்க மாட்டார்.
தம்பி என்று அல்லது பெயரை கூறி அன்பாக அழைக்கும் நல் உள்ளம். குலம் அண்ணா வுடனான உறவு எமது பள்ளி காலத்தில் தொடங்கியது. அவரது எழுத்தே தனிரகம், கணனிகள் இல்லாத காலத்தில் அவரது பேனாவே கணனியின் கதை சொல்லும் அவ்வளவு அச்சுறுப்பாக பிரின்ட் செய்தது போன்று தோற்றமளிக்கும்.
குலம் அண்ணாவின் “பேனா”மை படாத காணி ஆவாணங்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல உறுதி பத்திரங்களில் அவரது கை பட்டிருக்கும். சட்டத்தரணி குமாரசாமி அவர்களிற்கு எழுதுவினைஞராக கடமையாற்றிய காலம், மண்டான் உபதபாலகத்தில் பாணியாற்றிய சொற்ப காலம் என்று இவரது ஆற்றல் அளப்பரியது.
அறிவு, ஆற்றல், ஆளுமை என்ற திறன்களுக்கப்பால் விளையாட்டு துறையிலும் சிறந்த வீரர். சோளங்கன் நூல் நிலையத்தில் மாலை நேரங்களில் நண்பர்கள் பலருடன் இணைந்து “நெற்பந்து” விளையாட்டிலும் இவரது வீரம் வெளிப்படும் இவ்வாறான ஒர் ஆற்றல் மிக்க செயல் வீரன்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை எமக்குள் இடைவெளியை தோற்றுவித்தது. அவ் இடைவெளியில் வெவ்வேறு நாடுகளிற்கு நாம் எல்லாம் இடம் பெயர நேர்ந்தது. எப்போதாது ஒரு நாள் சந்தித்து கொள்வோம் என்றிருந்த எம் கனவை காலனவன் இவ்வளவு சீக்கிரம் பிரித்து விடுவான் என்று எண்ணவில்லை.
நல்லவர்களை காலன் விட்டு வைப்பதில்லை அதுவே குலம் என்ற எம் மானிடத்தையும் காலனவன் அழைத்து கொண்டான். குலம் அண்ணா வார்த்தைகள் வரவில்லை பழகிய எம்மாலே தாங்க முடியாத போது பாசமிகு அக்காமார், மருமக்கள் எவ்வாறு தாங்கி கொள்வர்.
தங்களின் துயர செய்தியினால் துவண்டு போயுள்ள குடும்பத்தார், உறவுகள், நண்பர்களுடன் நாமும் எமது ஆழ்ந்த துயரினை சுமந்து நிற்கின்றோம்.
-மண்ணின் மைந்தன்.

துயர் பகிருகிறோம்
ReplyDeleteநம்ப முடியவில்லை, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDelete