Sunday, March 3, 2019

மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்வதால் ஏற்படும் பலன்கள்!!

மாசி மாத கடைசியில் வருகிற கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மேற்கொள்ளும் விரதமே மகாசிவராத்திரி விரதமாகும்.  ஊழிக்காலத்தின் இறுதியில் சிவ பெருமானை பார்வதி தேவி நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்து பேறுபெற்றார். அவரைப் போன்று நாமும் இந்த நாளில் பூஜை செய்து வழிபட்டால் சிவபெருமானின் அருள் பெறலாம். 


மகாசிவராத்திரி அன்று காலை முதல் மறுநாளான அமாவாசை முடிய சிவபாராயணம் செய்து வரவேற்றும், இரவில் அருகில் உள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று வழிபட வேண்டும். இரவில் கண் விழித்து சிவபூஜையில் பங்கேற்றவர்கள், மறுநாள் அதிகாலை குளிர்ந்த நீரில் குளித்து சிவபெருமானை வில்வத் தளங்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால் விரும்பியது எல்லாம் கிட்டும் என்பது ஐதீகம். மகாசிவராத்திரியில் விரதம் மேற்கொண்டவர்கள் மறுநாள் அமாவாசை விரதத்தையும் சேர்த்து கடைபிடிப்பது இன்னும் சிறப்புத் தரும்.

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் அசுவமேதயாகம் செய்த  பலன் கிடைக்கும் என்று ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைணவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம் என்று கருட புராணம் கூறுகிறது. இந்த விரதத்தை 24 அல்லது 12 வருடங்களாவது மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாழ்வில் எல்லா வளமும் வந்து சேரும். பார்வதி தேவி ஒரு முறை விளையாட்டாக சிவனின் கண்களை தனது திருக்கரங்களால் பொத்தினாள். சிவனின் கண்கள் சந்திர, சூரியர்கள் என்பதால் பார்வதிதேவி அவற்றை கரத்தால் மூடிய மாத்திரத்தில் உலகத்தை இருள் சூழ்ந்தது. உலகத்தை இருளில் இருந்து மீட்க தேவர்கள் ஒரு நாள் இரவு முழுவதும் சிவனுக்கு பூஜை செய்தனர்.

அந்த இரவே மகாசிவராத்திரி என்கிறது சிவ புராணம். பாண்டவர்களில் ஒருவனான பீமன் தன் வீரம் பற்றி அகந்தை கொண்டிருந்தான். அவனது அகந்தையை அழிக்க விரும்பிய கிருஷ்ணர் ஒரு புருஷா மிருகத்தை அனுப்பினார். சிங்க முகம், யானையின் தும்பிக்கை, நீண்ட உடல் என்று வித்தியாசமான விலங்காக அது இருந்தது. அதனுடன் பீமன் முழுபலத்துடன் போரிட்டான். ஆனால், புருஷா மிருகத்தின் தாக்குதலை அவனால் சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோவிந்தா, கோபாலா என்று கதறிக் கொண்டே ஒரு இரவு முழுவதும் ஓடினான். அந்த இரவு சிவராத்திரி இரவாக அமைந்தது. இப்படி சிவராத்திரி இரவில் உறங்காமல் இறை நாமத்தை உச்சரித்ததால் பீமனை சிவன் காப்பாற்றினார்.

சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்று பலரும் நினைக்கின்றனர். எனினும் அவ்வாறல்ல. பார்வதி, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம் இந்த சிவராத்திரி. அதனால் பெண்களும் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். திருமணமான பெண்கள் தன்னோட கணவன் மற்றும் பிள்ளைகள் நலனுக்காகவும் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். 

சிவராத்திரியன்று விரதமிருந்தால் புத்தி முக்தி கிடைக்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். கோடி பாவங்களும் தீரும், நினைத்த காரியங்கள் நிறைவேறும். சிவராத்திரியன்று விரதம் இருந்து தான் பிரம்மா சரஸ்வதியைப் பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவியை அடைந்தார். மகாவிஷ்ணு விரதமிருந்து சக்ராயுதம் பெற்றதுடன் மகாலட்சுமியையும் உலக உயிர்களைக் காக்கும் உன்னதப் பதவியையும் அடைந்தார்.

No comments:

Post a Comment