காதல் திருமணம் செய்திருந்த இளைஞனும் பெண்ணும் தந்திரமாக அழைத்துச் செல்லப்பட்டு வடமராட்சி வல்லைவெளியில் வைத்து இளைஞன் தாக்கப்பட்டார். பெண்வீட்டாரால் குறித்த பெண்அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இளைஞன் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலி பகுதியில் வசிக்கும் 24வயதுடைய இளைஞன் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த முதலாம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர் என்று கூறப்படுகின்றது.
நேற்று முன்தினம் வலி கிழக்கிலுள்ள விவாகப் பதிவாளர் ஒருவரிடம் இருவரும் சென்று பதிவு திருமணம் செய்து தருமாறு கோர பதிவாளர் அவர்களுக்கு பதிவு திருமணம் செய்துவிட்டார்.
இருவரும் குடத்தனையில் இருப்பதை அறிந்த பெண்ணின் உறவுக்காரர் திருமணத்துக்குச் சம்மதிப்பதாக கூறி இருவரும் தங்கியிருந்த குடத்தனைக்குச் சென்றுள்ளார்.
குறித்த பெண் காணாமல் போனமை தொடர்பான முறைப்பாடு ஒன்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடந்தவாரம் பெண் வீட்டாரால் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த முறைப்பாட்டை மீளப் பெறவேண்டும் என்று இருவருக்கும் கூறப்பட்டது. அவர்கள் சம்மதித்ததும் இருவரும் ஒட்டோவிலும் பெண் வீட்டுக்காரர் வான் ஒன்றிலுமாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். வல்லைவெளியில் திடீரென ஒட்டோவை தடுத்து நிறுத்தி வானில் இருந்து இறங்கியவர்கள் இளைஞனை தாக்கிவிட்டு பெண்ணை தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டனர். என்று இளைஞனின் உறவிர்களால் தெரிவிக்கப்பட்டது. இளைஞனை தாக்கிவிட்டு பெண்ணை கடத்தி சென்றதாக தற்போது அச்சுவேலி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment