Sunday, April 30, 2017

கைவிலங்குடன் தப்பிச்சென்றவரை தேடி 30பேர் கொண்ட பொலிஸ் குழு வடமராட்சியில் வலைவிரிப்பு!

வடமராட்சி துன்னாலை மோதல் சம்பவம் தொடர்பில் கைதாகி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய இளவாலை மற்றும் பலாலி பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

கடந்த 21ம் திகதி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் சம்பவத்தில் இரு தரப்பில் நால்வர் காயங்களுக்குள்ளான நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிக்சை பெற்று வந்தனர். இதில் இருவர் பொலிஸ் கைவிலங்குடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரு சந்தேக நபர் கைவிலங்குடன் தப்பிச் சென்றிருந்தார்.

பின்னர் அவர் கிராமத் தலைவர் ஊடாக கைவிலங்கின் திறப்பினை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வாங்கி கைவிலங்கனை திறந்து சந்தேக நபரை தப்பிச் செல்ல வழிவகுத்துள்ளார். அதன் பின்னர் கைவிலங்கும் அதின் திறப்பும் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரியவருவதுடன்.

இதன் பின்னரும் குறித்த சந்தேக நபர் வாளுடன் நடமாடி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். இந் நிலையில் இவர் வெள்ளிக்கிழமை திக்கம் மாயாண்டி பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி பணத்தை அபகரித்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டதை, அடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ணவிற்கு முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்ய சிரேஸ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் 30பேர் கொண்ட விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு நெல்லியடி பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டதுடன் சந்தேக நபரின் மனைவியை கைது செய்தது.
மேலும் சந்தேக நபர் கைது செய்யப்படும்வரை இந்தப் பொலிஸ் குழு நெல்லியடி பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுமெனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment