வடமராட்சி குஞ்சர்கடை, விழுந்த ஆலடிப் பகுதியில் புகைப்படக் கலைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், இரு சக்கர உழவு ஊர்தியுடன் மோதுண்டு கோர விபத்துக்குள்ளானதில் புகைப்பட கலைஞர்களில் ஒருவர் பலியானதுடன் மற்றையர் படுகாயங்களுக்குள்ளானார்.
நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் திருமால்சோதி வீதி, நெல்லியடியைச் சேர்ந்த திருமலைச் செல்வன் சஞ்சீவ் (வயது-23) என்பவர் பலியானதுடன் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்தவரும் புற்றளை புலோலி தெற்கில் வசிப்பவருமான கணேசலிங்கம்லம்போசியன் (வயது - 19) என்பவர் படுகாயங்களுக்குள்ளானார்.
மரணமடைந்த இளைஞனின் தந்தையார் நெல்லியடி நகரில் புகைப்பட கலையகத்தினை நடத்தி வரும் நிலையில் அதில் வேலை செய்யும் மற்றைய இளைஞருடன் சேர்ந்து இருவருமாக சென்று கொண்டிருந்த போது இக்கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
குஞ்சர் கடைப் பக்கமாக இருந்து நெல்லியடியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த இரு சக்கர உழவு ஊர்தியுடன் வேகமாக மோதியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
இதில் சுயநினைவிழந்த இருவரும் வீதியால் பயணித்த பஸ் வண்டியில் ஏற்றப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சஞ்சீவ் என்ற இளைஞர் மரணமடைந்ததாக கூறப்பட்டது.
மற்றைய இளைஞர் தொடர்ந் தும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இருசக்கர உழவு இயந்திரத்துடன் சாரதியை தடுத்து வைத்துள்ள நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment