கரணவாய் மேற்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கும் கரணவாய் மகாவித்தியாலயத்திற்கு அதே கிராமத்தினை பிறப்பிடமாகவும் கனடாவை தற்போது வதிவிடமாகவும் கொண்டுள்ள புவனேஸ்வரி(புவனம் ரீச்சர்) ஜெயகுலசிங்கம் தம்பதிகள் மிகப்பெரும் அன்பளிப்பு ஒன்றினை வழங்கியுள்ளனர். “கந்தவுடையார் வளவு” என்று அழைக்கப்படும் இவர்களது மூதாதையினரின் அளப்பரிய பணியினால் உருவாக்கப்பட்டதே கரணவாய் மகாவித்தியாலயம் எனும் பள்ளி. இந்த பள்ளிக்கு என்று அண்மையில் மிகப்பெரும் பெறுமதியான தமது வீட்டினையும் அதனுடன் இணைந்துள்ள காணியையும் பாடசாலைக்கு வாரி வழங்கி மற்றையவர்களின் பார்வையையும் பாடசாலை மீது திரும்பி பார்க்க வைத்துள்ள இவ் தம்பதியினருக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
அமரத்துவம் அடைந்துள்ள அம்பலவாணர் முத்துச்சடையார் அவர்களின் மகள் புவனேஸ்வரியும் அவரது கணவர் ஜெயகுலசிங்கம் ஆகியோர் இணைந்தே இந்த மிகப்பெரும் பணியை செய்துள்ளனர். 1980களின் நடுப்பகுதியில் கனடாவிற்கு இவர்கள் இடம்பெயர்ந்தனர். தமது பூட்டனால் உருவாக்கம்பெற்ற மேற்படி பாடசாலையுடன் இவர்களது குடும்பத்திற்கு தொடர்ச்சியாக நெருக்கமான ஈடுபாடு இருந்தே வந்தது. இவ் பாடசாலையில் புவனேஸ்வரி(புவனம்ரீச்சர்) கல்வியை போதித்து வந்ததுடன், இவர்களது உடன்பிறவா சகோதரர் ஆன பரமநாதன் அவர்களும் பாடசாலையுடன் வலுவான உறவை மேற்கொண்டு வந்தனர்.
பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினராகவும், விளையாட்டு ஆசிரியராகவும், பகுதி நேர கணித பாட ஆசிரியராகவும் இவர் செயற்பட்டு வந்ததுடன். அவ் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்;களை சிறந்த மாணவர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும் உருவாக்குவதில் கணிசமான பங்களிப்பை நல்கியவர். ஆகவே இவர்களது மூதாதையரால் உருவாக்கம்பெற்ற பாடசாலைக்கு அவர்களது வாரிசுகள் தொடர்ந்தும் உதவும் பணியென்பது கல்வியில் பெரும் செல்வம் வேறெதுவும் கிடையாது என்ற முதுமொழிக்கு அமைவாக அமைந்துள்ளது.
இன்று பல நாடுகளில் பாடசாiயை அண்டிய கிராம மக்கள், பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் என்று பலர் உள்ளபோதும் மிக சொற்ப பகுதியினரே தங்களால் ஆன உதவியை தாயகம் திரும்பும்போது பாடசாலைக்கு வளங்கி வருகின்றனர்.
இன்று புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகளின் உதவியுடன் தாம் கல்வி கற்ற பாடசாலைகள், தமது ஊர் பாடசாலைகள் என்று பலவித உதவிகளை பெற்று, வளர்ச்சியை நோக்கி செல்கையில் எமது பாடசாலை மட்டும் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டிய நிலை. புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு கிளை அமைப்பினை நிறுவி அதன் ஊடாக தமது ஊரில், தாம் கல்வி பயின்ற பள்ளிகளிற்கு உதவி வருகின்றனர்.
நமது பள்ளிக்கு மாத்திரம் ஒரு சங்கமும் கிடையாது, கிளையும் கிடையாது. இதனை முன்னெடுப்பதற்கும் யாரும் தயாரில்லை. அவ்வாறு ஒரு சிலர் அதனை முன்னெடுக்க முனைந்தாலும் அதற்கு களங்கம் ஏற்படுத்தி அதனை சீர்குலைப்பதிலேயே குறியாகவுள்ளனர்.
இன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் பல முகப்பக்கங்கள்(Facebook) உருவாகி அதில் எந்த பாடசாலையில் கல்வி பயின்றீர்கள் என்றால் கூட அதனை கூறுவதற்கே தயங்கி, ஊரில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் கல்வி கற்றதாக கூறுகின்றனர். இது கூட அவர்களிற்கு அவமானமாக தெரியவில்லை.
ஏன் பாடசாலையை அண்டிய அல்லது அதன் எல்லைக்கு உட்பட்ட பிள்ளைகளை கூட எமது பாடசாலைக்கு அனுப்பி அதன் வளர்ச்சியை மேம்படுத்தி அதனையும் தலைசிறந்த பாடசாலைகளில் ஒன்றாக்க வேண்டும் என்று சிந்திக்காமல், நகர்புறங்களில் உள்ள பிரபல பாடசாலைகளிற்கே தமது பிள்ளைகளை அனுப்ப வேண்டும், அங்கு கல்வி பயின்றால்தான் தமது பிள்ளைகள், பொறியியலாளர், வைத்தியர், சட்டத்தரணியாக வர முடியும் என்ற கனவில் வாழுகின்றனர்.
இவர்கள் ஒன்றை மட்டும் உணர தயங்குகின்றார்கள். நகர் புற அல்லது தொலைதூர பாடசாலைகளிற்கு செல்வதால்தான் பிள்கைள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஊரில் உள்ள பாடசாலையில் கல்வியை பயின்றால் பாடசாலை தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர்களிற்கு இடையே தொடர்பு நிலை அதிகமாகும் இதன் மூலம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும் அல்லது பிள்ளைகள் தவறுகள், குற்றங்கள் செய்யும்போது உறவுகள், நண்பர்கள், தெரிந்தவர்கள் கண்டு கொண்டால் அந்த விடயங்கள் பெற்றோர்களின் கவனத்திற்கு வரும் என்பதை எல்லாம் உணர தவறிவிடுகின்றனர் பெரும்பான்மையான பெற்றோர்கள்.
ஏன் எமது பாடசாலையில் கல்வி பயின்ற பிள்ளைகள் பல்கலைக்கழகம் புகவில்லையா? உயர் கல்வியை தொடரவில்லையா? படிக்கும் பிள்ளை எங்கும் படிக்கும் என்பதற்கு அண்மையில் எமது பாடசாலையில் கல்வி பயின்று இன்று உயர்கல்வியை தொடரும் மாணவர்கள் பலர் சான்று.
பாடசாலைகள் தற்போது மாகாண அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது, இதன் மூலம் அனைத்து பாடசாலைகளையும் ஒரே அலகின் அடிப்படையிலே கண்காணிக்கப்படுகின்றது. பாடசாலைகளிற்கு உட்பட்;ட பிள்ளைகளை அவ் அவ் பாடசாலைகளிலேயே இணைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை கடுமையாக்குவதன் மூலம் நகர்புற அல்லது பிரபல பாடசாலைகளை நோக்கி நகரும் பெற்றோர்களின் போக்கினை நிறுத்தமுடியும்.
பாடசாலையின் தரத்தினை மேன்மேலும் உயர்த்தி எமது பாடசாலையும் சிறந்த பாடசாலை என்ற இலட்சியத்தை அடைய நாடுவிட்டு புலம்பெயர் தேசங்களில் வாழும் அனைத்து பளைய மாணவர்களும் பாடசாலைக்கு உதவிக்கரம் நீட்டி அதன் வளர்ச்சிக்கு உதவ முடியும். இன்று தான் வசித்துவந்த வீட்டினையே பாடசாலைக்கு வளங்கி பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவிக்கரம் நீட்டிய பெருந்தகை புவனேஸ்வரி ஜெயகுலசிங்கம் தம்பதிகள் போன்று இல்லாவிட்டாலும் சிறிதளவாது பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவுவதன் மூம் நாம் கல்வி கற்ற பள்ளியின் எதிர்காலத்தை சுபீட்சமாக்க முடியும்.
அன்புக்குரிய நண்பர்களே, சக மாணவர்களே, உறவுகளே, பாடசாலையின் சுற்றுவட்டத்தினரே, ஆசிரியர்களே, பளையமாணவர்களே நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு பணியை பூரணமாக முன்னெடுக்க முடியும். ஆகவே நீங்கள் வசியும் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ளவர்களை ஒன்று திரட்டி பாடசாலைக்குரிய உயரிய பணியை முன்னெடுக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.
"கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை"
-பளைய மாணவர்கள்


No comments:
Post a Comment