தற்போதுள்ள
பொருளாதார சூழ்நிலையில் பெண்கள் வீடு, வேலை என இரு படகில் சவாரி செய்யும் நிலையில்
உள்ளன. வேலை, வீடு என இரட்டைச் சுமையில் தவிக்கும், எல்லாப் பெண்களுக்குமான பொதுவான
பிரச்சனை, மன அழுத்தம். குடும்பத்துக்காக வேலையையோ, வேலைக்காக குடும்பத்தையோ விட்டுக்
கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த பெண்களுக்கு, தம்மை கவனித்துக்
கொள்ள, நேரம் ஒதுக்குவது அரிதாகிவிடுகிறது.
தம்மால் முடியவில்லையே என்கிற நினைப்புதான், அழுத்தத்தின் ஆரம்பம். குடும்பத்தில், மனைவியாக, தாயாக, பணிபுரியும் இடத்தில் நல்ல வேலையாளாக திறம்பட செயல்பட முடியாத போது, புலம்பல்கள் அடிக்கடி வந்தால், மன அழுத்த குகைக்குள் சிக்கி கொண்டதை அறியலாம். படபடப்பு, அழுகை, கோபம், எரிச்சல், தூக்கமின்மை, அதீத பசி போன்றவை ஸ்ட்ரெஸ்சின் அறிகுறிகள். வேலையையும் வீட்டையும் கவனிக்கிற, ஒவ்வொரு பெண்ணுமே, அசாதாரண மனுஷிதான். இரண்டு இடங்களிலும், எல்லா விஷயங்களிலும், நூறு சதவீத பர்பெக்சனை எதிர்பார்க்க ஆரம்பிக்கும் போதுதான், ஸ்ட்ரெஸ் வருகிறது.
நிதான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வேலையை, திறமைக்கான ஒரு வடிகாலாக பாருங்கள். படித்திருந்தும், வீட்டில் முடங்கி கிடக்காமல் இருப்பதற்கு, வேலை செய்வது ஒரு ஆறுதல். இதற்காக வேலை, வேலை என எந்நேரமும், அதைப் பற்றிய சிந்தனையில் ஓடுவதையும், அதிகமாக சம்பாதிக்க நினைப்பதும், ஆடம்பர வாழ்க்கைக்கான கனவு என்கிற, அதிகபட்ச ஆசைகள் தேவையில்லை. அந்த ஆசைகளை தேடி ஓட ஆரம்பித்தால், நிச்சயம் மனஅழுத்தத்தை சந்தித்தாக வேண்டும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, அதிகபட்ச கால ஒழுக்கம் அவசியம். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அக்கம் பக்கத்து வீட்டாருக்கு, எத்தனை மணித்துளிகளை ஒதுக்கலாம் எனத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பேஸ்புக்கோ, ட்விட்டரோ, டிவியோ, வேலைக்குச் செல்கிறவர்களின் களைப்பை நீக்கி புத்துணர்வு கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, உலகத்தை மறக்கும் அளவுக்கு, அதிலேயே மூழ்கக்கூடாது. வேலையிடத்தில் கூடியவரை வம்பு பேசுவதை தவிர்கக வேண்டியது அவசியம்.
வேலையிடத்தில்
செலவழிக்கிற நேரத்தை, ஆக்கப்பூர்வமாக செலவழித்தால், வேலை நேரம் முடிந்தும், அலுவலை
முடிக்க முடியாமல் உண்டாகிற, டென்ஷன் இருக்காது. இதை புரிந்து கொண்டு, வீட்டையும்,
வேலை பார்க்கும் தளத்துக்கான முக்கியத்துவத்தையும் எடை போட்டு பிரித்தாள தெரிந்தவர்களுக்கு,
எத்தகைய பிரச்சனைகளில் இருந்தும் விடுபட, வழி கிடைக்கும்.
No comments:
Post a Comment