Saturday, April 22, 2017

துன்னாலையில் கோஸ்டி மோதல் பெருமளவு பொலிசார் குவிப்பு!

துன்னாலை வேம்படிப் பகுதியில் நேற்று மாலை கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் காயமடைந்த ஐவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துன்னாலை கிழக்கு வேம்படிப் பகுதியில் உள்ள இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் பெரும் கோஷ்டி மோதலாக மாலை 5.00 மணியளவில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் கத்திகள், பொல்லுகள், போத்தல்களுடன் இரு தரப்பினரும் இறங்கி மோதலில் ஈடுபட்டனர். இதில் இருவர் படுகாயங்களுக்கும் மூவர் சிறுகாயங்களிற்கும் உள்ளாகினர். இச் சம்பவத்தை அடுத்து நெல்லியடிப் பொலிஸார் பகுதி எங்கும் போத்தல்கள் உடைக்கப்பட்டு சிதறிக் காணப்பட்டதை கண்டு கொண்டதுடன், பாதுகாப்பினை பலப்படுத்தி நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

அதேவேளை இம் மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் பிரதாப் (வயது 25) அமுதராசா யோகராசா (வயது 27) மற்றும் குணராஜ் இராஜேஸ்வரி (வயது 43) அஜந்தன் அபிசன் (வயது 12), மதன் கஜீவன் (வயது 10) ஆகியோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர்.

பொலிஸார் அங்கு பிரசன்னமாகியிருந்த போதும் மோதல் ஏற்படக்கூடிய பதற்றமான சூழ்நிலை காணப்பட்டிருந்ததால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வேறு பொலிஸ் நிலையங்களில் இருந்து மேலதிக பொலிஸார் அழைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.                  

No comments:

Post a Comment