வடமராட்சி பகுதியில் போலி நாணயத்தாள்களினை அச்சிட்டு அதனை புழக்கத்தில் விட்டு வந்த கும்பல் ஒன்றினை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் வல்லை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாளினை மாற்ற முனைந்தபோது கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நெல்லியடி பொலிஸ், உப பரிசோதகர் விமலவீர, ஜெகதீஸ்வரன், டென்சிராஜ், அஜித் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு புலன் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒருவர் பழைய வேதக்கோயிலடி இலக்கணாவத்தையயை சேர்ந்த 28வயதுடைய நபர் எனவும் மற்றைய நால்வரும் வன்னிச்சை அம்மன் கோயிலடி வல்வெட்டித்துறையை சேர்ந்த 17,18,21,25 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்திய கணனி, பிரதியாக்கல் இயந்திரட்; போலி நாணயத்தாள்கள்களினை அச்சிட்டு வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகள் என்பன வன்னிச்சை அம்மன் கோயிலடியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை இப்போலி நாணய்தாள்களினை அச்சிட்டு புழக்கத்தில் விடும் பிரதான நபர் கொழும்பில் இருந்து வடமராட்சிக்கு வந்து சென்று கொண்டிருப்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அவர் இன்றைய தினம் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment