மாணவர்களிடையே அறிவுத்திறன் மனப்பாங்கு, விழுமியங்கள், நல்ல பண்பாடுகள் என்பவற்றை வளர்த்து எதிர்காலத்தில் நற்பிரசையாக அவர்களை உருவாக்குவதற்கு உதவுகி்ன்ற பணியாக கற்பித்தல் நடவடிக்கைகளைக் குறிப்பிடமுடியும். கற்றலின் தொடக்கம் வகுப்பறையாகும்.
எனவே கற்றல் கற்பித்தல் தொடக்கம் வகுப்பறையாகும். எனவே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு வகுப்பறை முக்கியமானது. வகுப்பறையில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு காரணிகளுள் ஆசிரியரின் வகிபங்கு மிகவும் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது.
ஏனெனில் ஒரு சிறந்த நல் ஆசானால் மாத்திரமே வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கான முறையில் முகாமை செய்ய முடியும். அந்த வகையில் ஒரு ஆசிரியர் விளனத்திறன் வாய்ந்த வகுப்பறைக் கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளுக்கு எவ்வாறான உத்திகளைக் கையாள வேண்டும்? அதற்கான சில நுட்பங்கள் என்ன போன்ற விடயங்களை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
முதலில் ஆசிரியர் தனது பாடத்தில் அதிக நாட்டமுள்ளவராகவும் சிறந்த தேர்ச்சியுடையவராகவும் இருந்தாலேயே அவர் பாட அலகுகளையும் பயிற்சிகளையும் கொண்டு மாணவர்கள் பாடத்தில் முழுமையான அறிவு பெறுமாறு கற்பிக்க முடியும். அதற்கு அவர் தனது தொழிலில் விருப்புடையவராக இருக்க வேண்டும்.
எனவே ஆசிரியர்கள் பொறுப்புணர்ச்சி கொண்டவராகவும் மாணவர்களது முன்னேற்றத்தில் கரிசனை கொண்டவராகவும் மாணவரிடம் கல்வியில் விருப்பை ஏற்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில் பாட விடயத்தில் பாண்டித்தியம் பெற்ற பட்டதாரியாயினும் மாணவருக்கு புரியுமாறும் அவர்கள் ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் கற்குமாறும் கற்பிப்பவரே நல்லாசிரியராவார்.
பொதுவாக ஆசிரியர்கள் கற்கும் முறைகளைத் திட்டமிட்டு செயற்படுத்துபவராகவும் மாணவர்களது சிந்தனையை தூண்டுபவராகவும் கல்வியின் மூல வளங்களை சேகரித்து பாதுகாப்பவராகவும் மாணவர்களது தேவைகளையும் கல்வியின் நோக்கங்களையும் நிறைவு செய்யும் வகையில் முழுக்கல்விச் செயற்பாட்டையும் ஒருங்கிணைப்பாளராவும் திகழவேண்டும்.
மாணவர்களது முதிர்ச்சி நிலை இலக்கு மற்றும் அவாநிலை என்பவற்றை அறிந்து அவற்றுக்கு ஏற்ப தமது கற்பித்தல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அதாவது மாணவர்களது பின்னணி ஆற்றல் தகைமை வசதி ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டே அவாநிலைகளை ஏற்படுத்துவதில் வழிகாட்ட வேண்டும். மேலும் மகிழ்ச்சிகரமான வகுப்பறைக் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
சுத்தம் பேணப்பட வேண்டும். ஒழுக்கம் நிலைநாட்டப்பட வேண்டும். மாணவர்களது ஆளுமைத் திறன்களை வளர்த்து விடவேண்டும். அவர்கள் மத்தியில் கூட்டுறவின் அடிப்படையில் நட்புறவை, இடைத்தொடர்புகளை அதிகப்படுத்த வேண்டும்.
கற்றல் கற்பித்தல் ஆகிய இரு செயற்பாடுகளிலும் நுண்முறைகளைக் கையாள வேண்டும். கற்றல் தொடர்பான நுட்பங்களை, நவீன கற்றல் உபகரணங்களை பயன்படுத்துவது தொடர்பாக மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.அது மாணவர்களது கற்றலை மேன்மை அடையச் செய்யும். மேலும் கற்பித்தலுக்காக முடியுமான சந்தர்ப்பங்களிலெல்லாம் கற்றல் துணைச்சாதனங்களை உபயோகித்து கல்வியை வழங்குவது கற்றல் பணிகளை இலகுபடுத்துவதோடு மாணவர்களுக்கு கூடுதலான தெளிவையும் அளிக்கவல்லது.
வகுப்பறையில் ஒரு ஆசிரியர் சிறந்த தலைவராக இருக்க வேண்டும். அங்கு பாடத்தைக் கற்பிக்கும் நல்லாசானாகவும் நீதியை வழங்கும் நீதிபதியாகவும் ஒழுங்கு அமைதியை நிலைநாட்டும் பொலிசாகவும் ஒழுக்கங்களையும் நற்பண்புகளையும் கொண்ட சமயத் தலைவனாகவும் அமைதியையும் ஆதரவையும் வழங்கும் பெற்றோராகவும் அறிவுரை கூறும் நண்பனாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு ஓர் ஆசான் வகுப்பறையில் பல நடிபங்குகளை ஏற்று நடிகராக இருத்தல் வேண்டும். எனவே இவற்றில் இருந்து பார்க்கும்போது ஆசிரியத் தொழிலின் தாற்பரியத்தை தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஓர் ஆசிரியர் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் தான் கற்பிக்கும் விடயத்தை கவனமெடுத்து ஆயத்தஞ் செய்யாவிடில் அவர் வினைத்திறன் வாய்ந்த கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனவே ஒவ்வொரு ஆசிரியர்களும் தமது கற்பித்தல் பணியினை உணர்ந்து கற்றல்- கற்பித்தல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும்போது தான் எதிர்பார்த்த அறிவுள்ள மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும்.
No comments:
Post a Comment