உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல ஆதிபராசக்தியான அம்பிகைக்குரிய புனித புண்ணிய விரதம் தான் நவராத்திரி. நவராத்திரி மிகவும் சிறந்த நல்ல பலன்களை அளிக்கக் கூடிய சிறப்பு மிக்க ஒரு விரதமாகும்.
ஒன்பது நாள் வழிபாடியற்றும் இந்த நவராத்திரி புரட்டாதி மாதத்திலே வளர் பிறைப் பிரதமை முதல் நவமி ஈறாக ஒன்பது நாள்களுக்கு அம்பிகைக்குரிய தினங்களாகிப் பத்தாம் நாள் விஜய தசமி என்று வெற்றித் திருநாளாக்கி அனுட்டிக்கப்படுகின்றது.
நவராத்திரியானது மனித வாழ்வில் பிரதான இடத்திலிருக்கும் கல்வி, செல்வம், வீரம் ஆகியனவற்றின் மகி மையை எடுத்தியம்பும் நல்விழாவாகும். முதல் மூன்று நாள் வீரம் வேண்டி துர்க்கையையும் அடுத்த மூன்று நாள் செல்வம் வேண்டி இலக்குமியையும் இறுதி மூன்று நாள் கல்வி வேண்டி சரஸ்வதியையும் வழிபாடியற்றப்படுகின்றது.
உலகியல் வாழ்க்கைக்கு இம்மூன்றும் அவசியம் என்பதைக் காட்டவே நம் முன்னோர்கள் நவராத்திரி விழாவை ஏற்பாடு செய்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள். எல்லாம் தேவை யாக இருப்பினும் கல்விச் செல்வத்தையே மிக முக்கியமானது என்று கருதி சரஸ்வதி பூசையுடன் விஜயதசமி ஆயுத பூஜையையும் இணைத்து வழிபடுவது பாரம்பரிய சம்பிரதாயமாகும்.
‘நவராத்திரி’ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சரஸ்வதி பூசையே. தீயினாலோ, காற்றினாலோ, மழையினாலோ அழிக்க முடியாதது கல்வி ஒன்றேயாகும். ‘கல்வியே கருந்தனம்’ என்பதை நினைவில் நிறுத்தி நம் வாழ்வில் தெய்வ சக்தியை அறிமுகஞ் செய்து கலைமகளாம் சரஸ்வதி தேவியைக் கும்பிட உகந்த நாளாக இந்த நவராத்திரி விளங்குகின்றது. நல்ல பல நன்மைகளைத் தரும் நவராத்திரியை நாம் நிச்சயமாக அனுட் டித்தேயாக வேண்டும்.
இந்த நவராத்திரி நாள்களில் அம்பிகை ஆலயங்களிலும் மற்றும் இல்லங்களிலும் பொது இடங்களிலும் கொலு வைத்துத் தினமும் பூசை வழிபாடு ஆராதனைகள் இடம்பெறும். அடுக்கடுக்கான தட்டுகளில் அழகான பொம்மைகள் கொலு வைக்கப்படும். விநாயகர், அம்பிகை, கிருஷ்ணர், முருகன், இலக்குமி, சரஸ்வதி, யானை, எருது, பசு. குதிரை, சிங்கம் என்று இன்னோரன்ன பல பொம்மைகள் இந்தக் கொலுவில் இடம்பெறும்.
இந்த விரத நாள்களில் கன்னிப் பெண்களை குமரி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா,, சுபத்திரா, கலைவாணி முதலியனவாகப் பாவித்து அலங்காரஞ் செய்து அவர்கள் வீடு வீடாகச் சென்று அம்மன் புகழ் பாடிக்கொண்டு வருவர். இந்தியாவில் இந்த நவராத்திரி ஒரு பெரு விழாவாகக் கொண்டாடப்படும்.
நவராத்திரி விழாக் காலத்தில் அம்பிகை தோத்திரங்கள். அபிராமி அந்தாதி. லட்சுமி பாமாலை, சகலகலாவல்லி மாலை முதலானவை பாராயணம் பண்ணப்படும். நவராத்திரி முடிந்து பத்தாம் நாள் மகாநோன்பு நிறைவு பெறும். மகிஷாசுரனை வதம் செய்த ஆதிபராசக்தியானவள் வெற்றி வாகை சூடி வந்த நாளே வாழை வெட்டு நடைபெறுகின்ற விஜயதசமி நாளாகும்.
மகிஷாசுரனைச் சங்கரித்த நிகழ்வை எடுத்துக் காட்டும் முகமாக ஆலயங்களில் ‘மானம்பூ’ என்றழைக்கப்படுகின்ற வாழை வெட்டும் விழா நடத்தப்படுகின்றது. வன்னி மரத்திலே அசுரன் ஒளித்ததாகக் கருதியே வாழை மரத்தில் வன்னி இலைகள் சொருகப்பட்டிருக்கும். இந் நிகழ்வைத் ‘தசரா’ எனவும் அழைப்பார்கள்.
சைவமக்களால் பெரிதும் விரும்பி அனுட்டிக்கப்படும் நவராத்திரி இலங்கையில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வங்கிகள், பொது நிறுவனங்கள், சமய ஸ்தாபனங்கள் முதலிய இடங்களில் பெரு விழாவாக நடைபெறுகின்றது.
இந்த நவராத்திரி சைவமக்களின் பிரதான விரதநாளாகும். ஆதிபராசக்தியான அம்பிகையின் திவ்ய பெருங் கருணையைப் பெறுவதற்கு இது உகந்ததாகக் கருதப்படுகிறது. தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யும் பக்தர்கள் நவராத்திரி நாள்களில் தம்மால் இயன்றவரை தான தருமங்கள் செய்வதும் உண்டு.
இறுதி நாளான விஜயதசமியிலன்று சின்னஞ் சிறு சிறார்களுக்கு வித்தியாரம்பம் எனப்படும் ஏடு துவக்குகின்ற சிறப்பு நிகழ்வும் இடம்பெறுகிறது. பனை ஓலை ஏட்டில் அரிச்சுவடி எழுதிப் பாடத்தைத் தொடங்குகின்றனர். அரிசியில் எழுத்துக்களை எழுதிக் கல்வியானது ஒரு பிரதான குருவின் மூலம் ஆரம்பிக்கப்படுகின்றது.
அந்த வகையில் கல்வியை அடிப்படையாக வைத்தே சரஸ்வதி பூசையும் நடத்தப்படுகின்றது. கல்விக்கு அதிபதியான கலைவாணியை வழிபட்டு ஆராதிக்க இந்த நவராத்திரி சிறப்பானதாகும். ஆகவே, சைவ மக்கள் எல்லோரும் ஆதிபரா சக்தியான அம்பி கையின் பரிபூரண கிருபாகடாட்சம் பெற்றுக் கொள்ள நவராத்திரி விழாவைக் கொண்டாடுதல் வேண்டும். புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்திருக்கும் நாங்கள் சக்தி வழிபாட்டின் மூலம் சகல செளபாக்கியங்களையும் பெற்று உலகில் நல்வாழ்வு வாழ முடியும். மனித வாழ்வின் அடிப்படைத் தேவையான வீரம். செல்வம், கல்வி என இம்மூன்றையும் பெற்று வாழ்வில் சிறப்புற நவராத்திரியே வழி வகுக்கின்றது. அந்த வகையில் அதன் அருமை பெருமைகளை அறிந்து உணர்ந்து செயற்பட்டு உலகில் நலமே வாழ எங்களை நாங்களே தயார்ப்படுத்திக் கொள்வோமாக.

No comments:
Post a Comment