Saturday, May 10, 2014

டீன் ஏஜ் பிள்ளைகளிடம் எப்படிப் பேச வேண்டும்?


என்ன சொன்னாலும் தவறு... எப்படிச் சொன்னாலும் குற்றம்... டீன் ஏஜில் பிள்ளைகளை வைத்திருக்கிற அனேக பெற்றோருக்கு, தங்கள்  பிள்ளைகளிடம் எப்படிப் பேசுவது என்பது சவாலான ஒரு விஷயமே... பல நேரங்களில் பேச்சு பேச்சாக இல்லாமல், பெரிய வாக்குவாதமாகி, வீணான  மன வருத்தங்களைக் கொடுத்து விடுவதுதான் பிரச்னையே...

என்ன சொன்னாலும் தவறு... எப்படிச் சொன்னாலும் குற்றம்... டீன் ஏஜில் பிள்ளைகளை வைத்திருக்கிற அனேக பெற்றோருக்கு, தங்கள்  பிள்ளைகளிடம் எப்படிப் பேசுவது என்பது சவாலான ஒரு விஷயமே... பல நேரங்களில் பேச்சு பேச்சாக இல்லாமல், பெரிய வாக்குவாதமாகி, வீணான  மன வருத்தங்களைக் கொடுத்து விடுவதுதான் பிரச்னையே...

உங்கள் மகள் அவளது பிராஜக்டை முடிக்காமல் தன் தோழியுடன் மொபைலில் பேசிக் கொண்டிருப்பதைக் கவனிக்கிறீர்கள். “பிராஜக்டை  முடிக்காவிட்டால் மதிப்பெண் குறையும். அவள் விரும்பிய துறையில் சேர முடியாது. அவளுடைய எதிர்காலம் என்னாவது?’’ என்றெல்லாம் நீங்கள்  கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால், உங்கள் மகளோ, ‘எனக்கு இன்னிக்கு சஞ்சனாவோட பேசியே ஆகணும். அவளுக்கும் எனக்குமான மிஸ்  அன்டர்ஸ்டாண்டிங்கை இன்னிக்கு சரி பண்ணணும். இல்லைனா நாளைக்கு ஸ்கூலுக்கு போனா மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க.  எனக்கு சஞ்சனாவை விட்டா வேற பெஸ்ட் ஃப்ரெண்ட் இல்லை’ என யோசித்துக் கொண்டிருப்பாள்.

இருவரின் பார்வையும் உலகமும் வெவ்வேறு... ‘நான் என் ஃப்ரெண்ட்கூட பேசணும்மா’ என உங்கள் மகள் சொல்லும் போது, ‘அதெல்லாம் அப்புறம்...  முதல்ல நாளைக்கு டெஸ்ட்டுக்கு படிக்கிற வழியைப் பாரு’ என்று சொன்னால், ‘உனக்கு அறிவே இல்லம்மா. என் ஃபீலிங்ஸை புரிஞ்சுக்க  மாட்டேங்கிறியே...’’ என அவள் பதில் சொல்வது மட்டுமல்லாமல் அவள் பிராஜக்டை உதாசீனப்படுத்தி விடக்கூடும். மாறாக, ‘ஃப்ரெண்ட்ஸ்கூட  சண்டை போட்டா மனசு எவ்ளோ கஷ்டப்படும்னு எனக்குப் புரியும்மா.  அதே நேரம் நாளைக்கு டெஸ்ட்டுல நீ நல்ல மார்க்ஸ் வாங்கணுமில்லையா?  அது உன் கடமையில்லையா? நாளைக்கு டெஸ்ட்டுக்கு படிக்கவும், உன் ஃப்ரெண்ட் பிரச்னையை தீர்க்கவும் தனித்தனியா நேரம் ஒதுக்கி, அதைப் பத்தி  யோசிக்கலாம், சரியா?’ எனக் கேட்டுப் பார்த்தால், அம்மா தன் இடத்திலிருந்து யோசிக்கிறார் என்பதை உங்கள் மகள் உணர்வாள். நீங்கள் சொல்வதைக்  காது கொடுத்துக் கேட்கத் தயாராவது மட்டுமல்லாமல் பிராஜக்டில் கவனம் செலுத்தவும் செய்வாள்.

எத்தனை சிரமமான விஷயமாக இருந்தாலும் உங்கள் டீன் ஏஜ் மகன் அல்லது மகளுடன் பேச ஆரம்பிக்கும் போது, அவர்களைப் புரிந்து ஆரம்பிப்பது  அவசியம். அவர்கள் சொல்கிற அல்லது செய்கிற விஷயங்களில் உங்களுக்கு முழுமையான உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அதை  வெளிப்படுத்தாமல் அவர்கள் போக்கிலேயே சென்று நாசுக்காக உங்கள் கருத்துகளை எடுத்துரைப்பது அவசியம். அடுத்தது, உங்கள் மகனோ, மகளோ  சொல்கிற / செய்கிற விஷயங்கள் எதுவும் உங்களைக் குறி வைத்தவை அல்ல என்பதை உணருங்கள். உங்கள் மகள் ‘உனக்கு அறிவே இல்லம்மா’  என்று சொல்லும் போது அவள் உங்களை முட்டாள் என்று கருதுகிறாள் என நீங்கள் நினைப்பது தவறு. அவள் நீங்கள் சொன்ன விதத்தை தான்  குறிப்பிட்டிருப்பாளே தவிர உங்கள் அடிப்படையை அல்ல.

உங்கள் பிள்ளையின் செயல் அல்லது சொல்லை ரொம்பவும் பர்சனலாக, உங்களைத் தாக்குவதற்காக சொல்ல செய்யப்பட்டவையல்ல, அவை  அவர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடுதான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதற்குப் பழகிக் கொண்டீர்களேயானால் ‘டேக் இட் ஈஸி’  பாலிஸிக்கு மாறிவிடுவீர்கள்.  பிள்ளைகளின் நடவடிக்கைகள் சில நேரங்களில் உங்களை மிகவும் சோகமான மனநிலைக்குத் தள்ளலாம். பிள்ளை  வளர்ப்புப் பயணத்தில் இதெல்லாம் சகஜம் என உணரத் தொடங்கி விட்டாலே அந்த சோகம் காணாமல் போய் விடும். உங்கள் பிள்ளைகளிடம் ஐடியா  கேட்கவும், அவர்களுடன் இணைந்து செயலாற்றவும் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மகன்(ள்) மீது உங்களுக்கு அபாரமான நம்பிக்கை இருப்பதைச்  சொல்லுங்கள். அவர்கள் மீதும், அவர்களது திறமைகள் மீதும் உங்களுக்குள்ள நம்பிக்கையை அடிக்கடி வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கும்  உங்கள் மீதும், தங்கள் மீதும் நம்பிக்கை அதிகரிக்கும். 

சதா சர்வ காலமும், சகல விஷயங்களுக்கும் அவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிருங்கள். உதாரணத்துக்கு ‘ஒருநாளாவது சரியான  நேரத்துக்கு எழுந்திருக்கிறியா? உனக்கு என்னதான் பிரச்னை?’ என எரிந்து விழுவதற்குப் பதில், ‘கண்ணா... கரெக்ட் டைமுக்கு எழுந்திருக்கிறது  எப்படினு உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?’ எனக் கேட்கலாம். ‘தெரியலைம்மா’ என அவர்கள் பதில் சொல்கிற பட்சத்தில், ‘ஒண்ணும்  பிரச்னையில்லை. அது ஒண்ணும் பெரிய விஷயமும் இல்லை. நான் உனக்கு சில டெக்னிக்ஸ் சொல்லித் தரேன்’ என அன்பாகச் சொல்லிப் பாருங்கள்.  சொன்னபடியே உங்கள் பிள்ளையை சீக்கிரம் எழுந்திருக்கச் செய்ய சில வழிகளை முன் வையுங்கள். அதிலிருந்து அவர்களுக்குப் பிடித்த ஒன்றைத்  தேர்வு செய்யட்டும். இதன் மூலம் அவர்கள் தமது பிரச்னை என்ன என்பதையும்  அதற்கான தீர்வையும் தாமே உணர்வார்கள். எல்லா விஷயத்துக்கும்  நீங்கள் அவர்களுக்கு உதவ அருகில் இருக்கிறீர்கள் என்கிற நம்பிக்கையையும் இது கொடுக்கும்.

உங்களுடைய லட்சியம், உங்கள் பிள்ளை தன் மீது அக்கறை கொள்ள வேண்டுமென்பதாக இருக்க வேண்டும். அதே நேரம் தன்னுடைய  விஷயங்களில் தனக்கென ஒரு சுதந்திரம் இருப்பதாகவும் அவர்களை உணரச் செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகள் சொல்கிற ஒவ்வொன்றையும்  கவனமாகக் கேளுங்கள். அப்படி அவர்கள் முன் வைக்கிற விருப்பங்களைப் பற்றி, பகுத்தாறாய்வுடன் யோசிக்கக் கற்றுக் கொடுங்கள். அவர்கள்  எடுக்கும் முடிவுகளில் எது நல்லது, எது பிரச்னைக்குரியது, அதனால் உண்டாகக் கூடிய விளைவுகள் என்ன, அந்த முடிவு குறித்த உங்கள்  பிள்ளையின் அணுகுமுறை எப்படியிருக்கும் என எல்லாவற்றையும் பேசுங்கள். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் பிள்ளைகளின் பேச்சுக்குக்  காது கொடுக்கிறீர்களோ, அதே அளவு அவர்கள் உங்கள் வார்த்தைகளையும் கவனிப்பார்கள். உங்கள் மகனி(ளி)ன் உடல்மொழி, குரலின் ஏற்ற, இறக்கம்,  முகபாவனைகள் என எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். ஒவ்வொன்றும் ஒரு தகவல் சொல்லும்.

உங்கள் பிள்ளைகள் சொல்வதை முழுமையாகக் கேட்டு முடித்துவிட்டீர்களா? அடுத்து அவர்கள் சொல்கிற பிரச்னை குறித்த எந்த முடிவையும்  தீர்வையும் சொல்லாமல் உங்களுடைய கேள்விகளை அல்லது சந்தேகங்களை மட்டும் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். ‘நீ சொன்னதை நான் சரியா  புரிஞ்சுக்கிட்டேனாங்கிறது தெரியணும். நான் சொல்றது சரியானு பாரு... உனக்கும்  சஞ்சனாவுக்கும் சண்டை. சஞ்சனா ஸ்கூல்ல ரொம்பப் பிரபலம்.  அதனால இந்த சண்டையால மத்த பொண்ணுங்க உன்னை அவாய்ட் பண்ணுவாங்களோனு பயப்படறே... சரியா?’ இப்படி உங்கள் பிள்ளையின்  போக்கிலேயே பேசலாம். இன்னும் ஒரு படி முன்னேறி, உங்கள் மகள் அந்த விஷயத்தில் எப்படி உணர்ச்சிவசப்படுவாளோ அதே நிலையில் நீங்கள்  சிந்தித்து அவளின் வலியை நீங்களும் உணருகிறீர்கள் என்பதை அவளுக்கு தெரியப்படுத்தலாம். அதனால் அவளும் உங்களைப் புரிந்து கொண்டு நல்ல  விதத்தில் உங்களிடம் உரையாடுவாள்.

நீங்களும் அந்த வயதைக் கடந்து வந்தவர்தானே? மிகவும் இயல்பான உங்களுடைய இந்த வெளிப்பாடு, உங்கள் மகளை, அவள் இன்னும் மிச்சம்  வைத்திருக்கும் உணர்ச்சிகளையெல்லாம் கூட உங்களிடம் கொட்ட வைக்கும். ‘இந்த விஷயத்துல நீ எவ்ளோ வருத்தமா இருக்கேனு தெரியுது. நான்  உன் இடத்துல இருந்தேன்னா நானும் அப்படித்தான் நினைப்பேன். நீ நினைக்கிறது சரிதான். மத்த பொண்ணுங்க எல்லாம் உன்னை அவாய்ட்  பண்ணுவாங்க இல்ல...’ இப்படி சொல்லிப் பாருங்களேன். ‘அம்மா நீ என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கே’ என்பாள். உங்கள் பிள்ளையின் பிரச்னை  குறித்த அத்தனை விஷயங்களையும் முழுமையாக உள்வாங்கும் வரை, எந்தத் தீர்வையும் முன் வைக்காதீர்கள். ‘இந்தப் பிரச்னையை சரியாக்க  சரியான வழி என்னனு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கியா?’ எனக் கேளுங்கள். 

உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தயங்காதீர்கள். அந்த அனுபவங்கள் உங்கள் பெருமை  பேசுவதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், ஒரு விஷயம்... உங்கள் கடந்த கால அனுபவங்களைப் பற்றி நீங்கள் சொல்லப் போகிற  விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் உங்கள் பிள்ளைகள் ஆர்வமாக இருக்கிறார்களா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்கள் வயதில் இருந்தபோது குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காகவோ, வீட்டுக்கு தாமதமாக வந்ததற்காகவோ உங்கள் பெற்றோரிடம்  திட்டு வாங்கிய சம்பவத்தைச் சொல்லும் போது உங்கள் பிள்ளைகள் ரசிக்கலாம் அல்லது ‘அதெல்லாம் அந்தக் காலம் அது வேற... இது வேற...’ என  அலட்சியப்படுத்தவோ கூடும்.

உங்கள் பிள்ளைகளுடனான உரையாடலை ஆரோக்கியமாக வையுங்கள். உங்கள் உரையாடலில் நிறைய கேள்விகள் இருக்கும்படியும், அவற்றுக்கு  உங்கள் பிள்ளைகள் விளக்கம் சொல்லவும், விவரிக்கவும், தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இடமிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
‘சஞ்சனாவுக்கும், உனக்குமான பிரச்னை நாளைக்கு சரியாயிடும். விடு’ எனச் சொல்வதற்குப் பதில். ‘நீ ஏன் இப்பவே சஞ்சனாகிட்ட பேசக்கூடாது?  உனக்கு நான் வேணா ஹெல்ப் பண்றேன்’ என்று சொல்லலாம். உங்கள் பிள்ளையின் ஒத்துழைப்பு, பாராட்டு, நன்னடத்தை என எதுவுமே உங்களுக்குத்  தேவையில்லை எனப் புரிந்து கொள்ளுங்கள். அப்படி சில விஷயங்கள் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என நினைத்து, எதிர்பார்க்க  ஆரம்பித்தால், உங்கள் பிள்ளைகள் அப்படி நடந்து கொள்ளாத பட்சத்தில் உங்களுடைய மனநிலை வேறு மாதிரி மாறும். 

எதிர்பார்த்தபடி நடக்காத போது, அதைக் கிடைக்கச் செய்ய அவர்களைக் கட்டுப்படுத்தவும் நிர்ப்பந்திக்கவும் தூண்டும். அந்த அணுகுமுறை  சரியானதல்ல. உங்கள் பிள்ளையின் நடத்தை குறித்த பிரச்னையின் போது நீங்கள் எப்படி நடந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் முடிவு  செய்ய வேண்டும். அந்த விஷயத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றி யோசிக்காமல், ‘நான் எப்படி நடந்து கொள்ள  வேண்டும்?’ என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.  உங்கள் பிள்ளைகள் சரியாக நடந்து கொள்கிற வரை அவர்களுடன் பேசுவதைத்  தவிருங்கள். ஒரு உண்மை தெரியுமா? உங்கள் பிள்ளையை எப்படி சரி செய்வது என முயற்சிப்பதை நிறுத்தி விட்டாலே உங்களுக்கு நிறைய நல்ல  வழிகள் தோன்றும். உங்கள் பிள்ளைக்கும் தன் எதிர்ப்பைக் காட்ட ஆளின்றிப்போகும். உங்கள் பிள்ளையைக் கட்டுப்படுத்துவது, அவன் (ள்) செய்கிற  விஷயங்களுக்கு ரியாக்ட் செய்வது போன்றவற்றை நிறுத்தினால், உங்கள் மகன் அல்லது மகள் உங்களிடம் மோதுவதைத் தவிர்த்து தனக்குத்தானே  தான் போராட வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம்... உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்குமான பிரச்னை சுமுகமாகும் வரை எதையும் செய்யாதீர்கள். நீங்கள்  மனச்சலனத்துடன் இருக்கும் போது, உங்கள் பிள்ளைகளின் பேச்சுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. எதையும் சொல்லாதீர்கள். எதையும்  செய்யாதீர்கள். உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கியபிறகு அவர்களுடன் அமைதியாக உட்கார்ந்து பேசலாம். எந்த ஒரு பிரச்னைக்கும்  அது அனல்  பறக்க விவாதிக்கப்படும் போது, அதற்கான தீர்வு காண முயல வேண்டாம். எனவே, நீங்களும் சரி, உங்கள் பிள்ளைகளும் சரி மோசமான  மனநிலையில் இருக்கும் போது பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமல், நிலைமை சரியான பிறகு பேசுவதே சரியான அணுகுமுறை.உங்கள் மகன்  அல்லது மகளிடம் ஒரு விஷயத்தைப் பற்றிய உரையாடலைத் தொடங்குகிறீர்கள்... அவர்களுக்கு அப்போது அதைப் பற்றிப் பேச விருப்பமின்றி, எரிந்து  விழுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். சட்டென உணர்ச்சிவசப்படாமல், அந்த உரையாடல் சண்டையில் போய் முடியாம லிருக்கும்படி பார்த்துக்  கொள்ளுங்கள்.

கடைசியாக ஒரு விஷயம்... எந்த விஷயத்துக்கும், எந்தப் பிரச்னைக்கும் விளக்கமும், தீர்வும், ஆறுதலும் தேடி உங்களிடம் வரலாம் என்கிற  நம்பிக்கையை உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். ‘நீ செய்யற எல்லாத்தையும் நான் ஏத்துக்குவேன்னு நினைக்காதே. நீ எப்படியிருந்தாலும் உன்  மேல எனக்கு அளவுகடந்த அன்பு உண்டு’ என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள்.

தவிர... உங்கள் பிள்ளை உங்களிடம் பேசும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் எனக் கவனியுங்கள். பேப்பர் படித்துக் கொண்டோ, சமைத்துக்  கொண்டோ, பாத்திரம் கழுவிக் கொண்டோ அவர்களுக்குக் காது கொடுக்காமல், கண்ணோடு கண் பார்த்துப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். ‘நீ சொல்றதை  நான் முழுமையா கேட்கறேன்’ என்கிற நம்பிக்கையை கண்கள் மட்டும்தான் ஏற்படுத்தும். உங்கள் பிள்ளைகளின் பேச்சில் குறுக்கிடாதீர்கள். அவர்களது  கருத்தில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும், முழுமையாகப் பேச அனுமதியுங்கள். பேச்சை முழுவதும் கேட்ட பிறகுதான் அதை சரிப்படுத்தும்  முயற்சியை ஆரம்பிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுடன் உரையாடும் போதான உங்கள் குரல் மிகவும் முக்கியம். எரிந்து விழுகிற தொனியிலோ,  கோபமான குரலிலோ பேசுவதைத் தவிருங்கள். நாம் பெரும்பாலான நேரங்களில் நமக்கிருக்கும் வேறு பிரச்னைகளின் தாக்கத்தினால் பிள்ளைகளிடம்  அப்படித்தான் பேசுகிறோம்.

உங்கள் பிள்ளைகள் எதையோ உங்களிடம் சொல்ல நினைப்பார்கள். ஆனால், அதை எப்படி, எங்கிருந்து ஆரம்பிப்பது என்கிற தயக்கமிருக்கும். அப்படி  அவர்கள் மனதை மோப்பம் பிடிக்க உங்களுக்கு சில குறிப்புகள்.. - தனது பிரச்னையை தன் நண்பரின் பிரச்னை மாதிரிப் பேசுவார்கள். 
உதாரணத்துக்கு... ‘அம்மா அந்தப் பையன், வீடியோ கடையிலேருந்து காசே கொடுக்காம சி.டி.-யை எடுத்துட்டு வந்திருக்கான். கடைக்காரங்களுக்குத்  தெரிஞ்சிட்டா அவனைப் பிடிச்சிடுவாங்களாம்மா? பெரிய பிரச்னை ஆயிடுமா?’

உங்களுடைய டீன் ஏஜ் அனுபவங்களைப் பற்றி ஆர்வமாக விசாரிப்பார்கள். ‘அம்மா உனக்கு முதல் முதல்ல யார்மேல காதல் வந்துச்சு? எப்போ?’ தனக்கிருக்கும் பிரச்னையை வேறு வழியில் உங்களுக்கு வெளிப்படுத்தலாம். உதாரணத்துக்கு தனது அறையில், தனது படுக்கையில் ஒரு புத்தகத்தைத்  திறந்த நிலையில் வைத்திருந்தாள் ஒரு டீன் ஏஜ் பெண். திறந்திருந்த அந்தப் பக்கங்களில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? ‘டீன் ஏஜ்  பிள்ளைகளுக்கும் மன அழுத்தம் வரும்’ என்று. அதாவது, தான் மன அழுத்தத்தில் இருப்பதையும் தனக்கு உதவி தேவைப்படுவதையும் மறைமுகமாக  உணர்த்தியிருக்கிறாள் அவள்.

உங்கள் மகள் அல்லது மகனிடம் சில விஷயங்களை நேருக்கு நேர் பேசத் தயக்கமாக இருந்தால் கடிதம் அல்லது இ மெயில் மூலம் அவர்களுக்குச்  சொல்லுங்கள். எழுத்தின் மூலம் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அதன் பிரதிபலிப்பே வேறு மாதிரி இருக்கும். அதற்காக  எதற்கெடுத்தாலும் எல்லாவற்றுக்கும் கடிதம் எழுதுவதையும் தவிருங்கள். நேரில் விளக்கமாகப் பேச முடியாத விஷயங்களை எழுத்தில் முழுமையாகப்  பகிர முடியும் என்கிற சந்தர்ப்பங்களுக்கு மட்டும் அது சரி. மற்றபடி எல்லா நேரங்களுக்கும் அது தேவையில்லை. 

கடிதம் எழுதுவதில் இன்னொரு நன்மையும் உண்டு. நேருக்கு நேரான உரையாடலின்போது எதிர் தரப்பிலிருந்து எழக்கூடிய எதிர்ப்பு அல்லது  கோபத்துக்கு இங்கே வழியில்லை. அன்பைச் சொல்லும் ஆழமான வழி இது என்பதிலும் சந்தேகமே இல்லை. உங்கள் பிள்ளை எப்போதும் உங்களுடன்  உரையாடத் தயார்தான். ஆனால், அதை எப்படி சரிவரச் செய்வது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். இதற்கு காரணம் அவர்களுடைய பருவம். இதை   நீங்கள்  உணர்ந்து கொண்டாலே அவர்கள் சொல்லும் செயலும் உங்களுக்கு எளிதில் புலப்படும். 

No comments:

Post a Comment