அதன்படி நடந்தால் நாட்டில் விவாகரத்துகள் குறைந்துவிடும் இன்று நான் தெய்வ சாட்சியாக கைபிடிக்கும் இந்தப் பெண்ணுடனான பந்த பாசத்தை மரணிக்கும் வரை கைவிட மாட்டேன் என்று மணமகனும், இன்று தெய்வ சாட்சியாக கைபிடிக்கும் இந்த ஆண் மகனுடனான பந்த பாசத்தை மரணிக்கும் வரை கைவிட மாட்டேன் என்று மணமகளும் உறுதிமொழிகளை பொதுவாக திருமண வைபவங்களின் போது கேட்கவும் அவதானிக்கவும் முடியும்.
இவ்விதம் தெய்வ சாட்சியாக நாம் இருவரும் பிரிந்துவிட மாட்டோம் என்று தங்கள் திருமணத்தில் பங்குகொள்ளும் அனைவர் முன்னிலையிலும் உறுதியளித்தும் கணவன், மனைவியரில் எத்தனை பேர் வாழ்நாள் பூராவும் இந்த உறுதி மொழியை கடைப்பிடிக்கிறார்கள் என்று நாம் அவதானித்துப் பார்த்தால், நாம் உண்மையிலேயே வெட்கத்தால் தலைகுனிய வேண்டியிருக்கும்.
சுமார் 5 அல்லது 6 தலைமுறைகளுக்கு முன்னர் இந்தியாவிலும், இலங்கையிலும் விவாகரத்து அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள் என்ற சொல்லுக்கே இடமிருக்கவில்லை. அன்றைய கூட்டுக் குடும்ப வாழ்க்கையும் குடும்பத் தலைவர் மீது அனைவரும் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையுமே கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்படும் சிறு பூசல்களையும், மோதல்களையும் கூடிய வரை சுமூகமாக தீர்த்து வைப்பதற்கு பேருதவியாக அமைந்திருந்தது.
ஆனால், நாகரீக மோகத்தில் ஆழ்ந்திருக்கும் இன்றைய மனித சமுதாயம் திருமணம் என்ற பந்த பாசத்திற்கு மிகக்குறைந்தள விலேயே மதிப்பைக் கொடுக்கின்றது. அதனால், கணவன் மீது மனைவியோ மனைவி மீது கணவனோ பந்த பாசத்துடன் இருப்பதற்கு பதில் இருவரும் ஒருவரிடமிருந்து பொருளாதார ரீதியில் நன்மையடைய வேண்டுமென்ற குறிக்கோளுடனேயே வாழ்கிறார்கள்.
இப்படியான பொறுப்பற்ற வாழ்க்கையே அவர்களின் திருமண வாழ்க்கை முறிவடைவதற்கும் கணவன் புதிய காதலியையும் மனைவி புதியதோர் காதலனையும் கைபிடித்து இரட்டை வாழ்க்கை வாழ்வதற்கும் வழிவகுக்கின்றது.
மேற்கு நாடுகளில் பெரும்பாலும் பெண்கள் 28 வயதைக் கடந்த பின்னரும் ஆண்கள் 35 வயதை அடையும் பின்னருமே திருமண பந்தத்தில் இணைகிறார்கள். அதற்கு முன்னர் விடலைப் பருவத்தில் இருந்தே ஆண்களும், பெண்களும் காதலர்களாக இருந்து ஒரே வீட்டில் தாம்பத்திய வாழ்வு நடத்தும் ஒரு புதிய கலாசாரம் அங்கு உருவாகியிருக்கிறது.
பெரும்பாலும் இவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் காலத்திலேயே இந்த காதல் தொடர்புகள் ஏற்படுவதுண்டு. அதையடுத்து அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள காதலன் அல்லது காதலி தன்னுடன் வாழ்நாள் பூராவும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான தகுதியை பெற்றிருக்கிறார்களா என்பதை நடைமுறை வாழ்க்கையில் பரீட்சித்து பார்ப்பதற்காக அவர்கள் இருவரும் இரண்டு, மூன்று வருடங்கள் தாம்பத்திய உறவை நடத்துவார்கள்.
தங்கள் பராமரிப்புக்கும் உணவுக்கான செலவையும் இருவரும் பங்கு போட்டுக் கொள்வார்கள். இவ்விதம் மூன்று, நான்கு வருடங்களுக்கு ஒன்றாக வாழ்ந்த பின்னர் இவள்தான் எனக்கு பொருத்தமான மனைவி அல்லது இவன்தான் எனக்கு பொருத்தமான கணவன் என்று இறுதித் தீர்மானம் எடுத்த பின்னரே அந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும்.
தாம்பத்திய வாழ்க்கை நடத்தும் போது பெண் கரு தரித்தால் அவர்கள் இருவரின் உடன்பாட்டுக்கு அமைய கருச்சிதைவு செய்யப்படும். கத்தோலிக்க நாடுகளான இத்தாலி, 1970ம் ஆண்டிலும் போர்த்துக்கல் 1975ம் ஆண்டிலும், ஸ்பெயின் 1981ம் ஆண்டிலும் அயர்லாந்து 1996ம் ஆண்டிலும் மோல்டா 2011ம் ஆண்டிலும் விவாகரத்துச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் மாத்திரம் விவாகரத்துச் செய்வதற்கு சட்டபூர்வமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் 54 சதவீதமான திருமணம் செய்தவர்கள் விவாகரத்து செய்துள்ளார் கள் என்று புள்ளி விபரங்கள் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு ள்ளன. பிள்ளைகள் இல்லாத தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்ளும் போது, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
பிரிந்து செல்லும் கணவனும், மனைவியும் தங்கள் சொத்துக்கள், உடமைகளை நீதிமன்ற உத்தரவின் மூலம் இருசாராரும் திருப்தியடையக்கூடிய வகையில் பகிர்ந்து கொள்வதற்கு அரிய வாய்ப்பு இருக்கின்றது. இதனால், பிரிந்து செல்லும் தம்பதியினர் தாங்கள் வாழும் வீட்டை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர் வேறு இடம் செல்வதற்கும் இது உதவுகின்றது.
ஆனால், இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளின் பெற்றோர் விவாகரத்து செய்யும் போது, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பிள்ளைகளுக்கு மிகவும் பாதகமாக அமைகின்றன. பிள்ளைகளை தந்தையா? தாயா? பராமரிப்பது, பிள்ளைகள் எங்கு தொடர்ந்தும் குடியிருப்பார்கள், அவர்களுக்கான செலவுத் தொகையை யார் கொடுப்பார்கள் போன்ற பலதரப்பட்ட சமூகப் பிரச்சினைகளும் இதனால் ஏற்படுகின்றன.
பிள்ளைகள் பொதுவாக தாயுடனேயே தங்கியிருக்க விரும்புவார்கள். அப்படியான சந்தர்ப்பத்தில் தந்தை பிள்ளைகள் மீது அன்பு கொண்டவராக இருந்தால், சரி நீங்கள் அம்மாவுடன் தங்கியிருக்கலாம். உங்களுக்கான மாதாந்த பணத்தை நான் உங்களுக்கு தந்து விடுகிறேன் என்று கூறுவார். வேறு சில தந்தையர், நீங்கள் அப்பாவோடு வந்தால்தான் உங்களை நான் காப்பாற்றுவேன். அம்மாவோடு இருந்தால் நீங்கள் பட்டினி கிடந்து சாகவேண்டியிருக்கும் என்று அச்சுறுத்துவர்.
சில தாய்மார் தொழில் பார்ப்பவர்களாக இருந்தால் கணவனுடைய எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பிள்ளைகளை தானே காப்பாற்றுவாள். தொழில் புரியாத தாய்மார் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவதற்கு எவ்வளவுதான் வேலை தேடி அலைந்தாலும் வேலை கிடைக்காத போது பிள்ளைகளை கவனிப்பதற்காக அந்தப் பெண்கள் விலை மாதர்களாக மாறி பணம் சம்பாதிக்க வேண்டிய அவல நிலையும் எங்கள் சமூகத்தில் ஏற்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
இலங்கையில் தற்போது சுமார் 300 விவாகரத்துகள் நாளாந்தம் நடைபெறுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கணவன் - மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு இன்மையும் வருமானப் பற்றாக்குறையும் மனைவியின் ஊதாரித்தனம் அல்லது கணவனின் கருமித்தனம், கணவன் அல்லது மனைவி மாற்றான் மனைவியுடனும், இன்னுமொரு திருமண ஆணுடனும் மையல் கொள்வதும் இந்த விவாகரத்துகளுக்கு பின்னணியில் உள்ள காரணங்களாகும். திருமணம் முடிந்து முதலாவது வருடம் பூர்த்தியாவதற்கு முன்னரே பெரும்பாலான விவாகரத்துகள் இடம்பெறுகின்றன.
No comments:
Post a Comment