நீரிழிவு ஒரு நோயல்ல. அது மனிதனிடமுள்ள ஒரு குறைபாடு மட்டும்தான். மனிதன் தனது மனதைக் கட்டுப்படுத்தி இனிப்புப் பண்டங்களையும், மா பொருள் உணவுகளையும் மிகவும் குறைந்தளவில் உட்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும். இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சுமார் 80 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நீரிழிவு நோயினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தவர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். அன்று நம் நாட்டு மக்கள் கடும் உழைப் பாளிகளாக இருந்ததனால் இந்த நோய் அவர்களை அணுகவில்லை.
20 முதல் 50மைல் தூரத்தை சென்றடைவதற்கு அன்றைய மக்கள் பஸ்களையோ, வாகனங்களையோ பயன்படுத்தவில்லை. சுமார் 10 மைல் அல்லது 15 கிலோமீற்றர் தூரத்திற்கு அன்றைய மக்கள் நடந்தே செல்வார்கள். 50 முதல் 60 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஓரிடத்திற்கு செல்ல வேண்டுமானால் அவர்கள் துவிச்சக்கர வண்டிகளையே பயன்படுத்தினார்கள். இவ்விரண்டு பயணங்களும் அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமைந்ததுடன், பெருமளவில் வியர்வை உடலில் இருந்து வெளியேறி தங்களின் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை கரைத்துவிடுகிறது.
இதனால் அன்றைய மக்கள் சற்று கூடுதலாக இனிப்புப் பண்டங்களை உண்டாலும் உடலில் இயற்கையாக இருக்கும் இன்சுலின் சக்தி மேலதிகமாக உண்ட இனிப்பு பண்டங்களினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை சமனிலை செய்து விடுகின்றது. அன்றைய காலகட்டத்தில் கால்விரல்களையும், கால்களையும் சத்திரசிகிச்சை செய்து வெட்டப்பட்டு, சக்கர நாள்காலிகளில் பயணிப்பவர்களை நாங்கள் காண்பது அரிதாக இருந்தது. ஆனால், இன்று சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை நீரிழிவு நோயினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். நீரிழிவு நோய் தெற்காசிய நாடுகளில் அதிகரிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ‘பாஸ்புட்’ என்ற ஒரு நொடிப்பொழுதில் தயாரிக்கப்படும் உணவுப் பொரு ட்கள் மற்றும் ‘பிரைட் ரைஸ்’ போன்றவையே பிரதான காரணமென்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
உலக சனத்தொகையில் 14சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையிலும் இந்நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதனால் மக்களை இந்நோயில் இருந்து காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு பயிற்சிப் பாசறைகள் இப்போது நாடெங்கிலும் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மாத்திரம் 53 மில்லியன் பேர் நீரிழிவு நோயினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
எனவே இந்நோய் குறித்து உடனடியாக விழிப்புணர்வு நடவடிக்கை அவசியம் என்று சர்வதேச நீரிழிவு சம்மேளனம் அபாய அறிவித்தல் விடுத்துள்ளது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது அவசியமாகும்.
கூடியவரையில் இனிப்புப் பொருட்களையும், மென்பானங்களையும் அருந்துவதை தவிர்த்துக் கொள்வதுடன், சீனியின்றி தேனீர் அருந்துவதற்கும் எங்கள் நாவை பழக்கிக் கொள்வது அவசியமாகும். நீரிழிவு நோயாளிகள் வயிறு நிறைய உணவு உட்கொள்ளலாம். ஆனால், அவர்கள் அந்த உணவின் ஒரு சிறிய பீரிஸ் அளவிலான சோற்றையே சேர்த்துக் கொள்ள வேண்டும். கூடுதலான கீரை, சுண்டல் வகைகள் பெருமளவு காய்கறிகளை வயிறு நிறைய உண்பது தவறில்லை மீன், இறைச்சி போன்றவற்றையும் அளவுடன் உட்கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நீரிழிவு நோயினால் பாதிப்பிற்குள்ளானவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலங்களாவது தேகப்பியாசம் செய்ய வேண்டும்.
தேகப்பியாசம் செய்ய வசதியற்றவர்கள் குறைந்தபட்சம் 5 கிலோமீற்றர் தூரத்திற்காவது நாளாந்தம் வேகமாக நடக்க வேண்டும். இரவு ஆகாரத்தை குறைவாக எடுத்து காலை ஆகாரத்தை வயிறு முட்டும் அளவுக்கு எடுப்பதில் தவறில்லை. பகல் ஆகாரம் சற்று குறைவாக எடுப்பதில் உடலுக்கு தீங்கு ஏற்படாது. நீரிழிவு நோய் தொடர்பாக அனுபவமிக்க வைத்தியர் தகவல் தருகையில், மன அழுத்தம் இருப்பவர்களும், ஏதாவது ஒரு வேதனையினால் சிந்தித்துக் கொண்டிருப்பவர்களும் நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகமாக எதிர்நோக்க வேண்டியிருக்குமென்று கூறுகிறார்.
எனவே, கூடியவரையில் நீரிழிவு நோயாளிகள் மன அமைதியுடன் பிரச்சினைகளை பற்றி சிந்திக்காமல் இருந்தால் இந்த நோயின் தாக்கம் குறையுமென்று வைத்தியர்கள் கூறுகிறார்கள். நீரிழிவு நோயினால் பாதிப்பிற்குள்ளானவர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு ஒரு தடவையாவது தங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நோயின் தாக்கம் அதிக ரித்திருப்பதை அதன் மூலம் கண்டு கொண்டால் உடனடியாக தங்கள் உணவை குறைத்துக் கொண்டு இனிப்புப் பண்டங்களை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய நவீன உலகில் நீரிழிவு நோயின் அளவை தெரிந்து கொள்வதற்கான இரத்தத்தை சோதித்துக் கொள்வதற்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியதில்லை.
சுமார் 4500 ரூபாவுக்கு இந்தக் கருவியை நீங்கள் பெற்று உங்கள் இரத்தத் தின் அளவை பரிசோதனை செய்து கொள்ள முடியும். ஒவ்வொரு தடவையும் இரத்தத்தை பரிசோதிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறிய அட்டைக்கு 39 ரூபாவே நீங்கள் செலவிட வேண்டும். இன்று இலங்கையில் பல வைத்தியசாலைகளில் நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கான விசேட நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள வைத்திய நிபுணர்கள் உங்களின் உடலில் உள்ள நீரிழிவு தன்மையை குறைத்து உங்களை சுகதேகிகளாக இருப்பதற்கு சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள்.
நேற்று உலக நீரிழிவு தினம் எல்லா நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டது. நம் நாட்டவர்களும் மீண்டும் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எமது மூதாதையர் நீரிழிவு நோயின்றி வாழ்ந்தது போன்று எங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு திடமான மனதுடன் செயற்படுவது அவசியமாகும்.
No comments:
Post a Comment