உலகெங்கும் வாழும் இந்துக்கள் பெண்மைக்கு முதலிடம் கொடுத்துள்ளனர் என்பதற்கு சான்றாகவுள்ளது நவராத்திரி விரதமாகும். சிவனுக்கு ஓர் இரவும், சக்திக்கு ஒன்பது இரவுமாக விரதமிருப்பதைக் காணலாம்.
சக்தி வழிபாடு எப்போது ஆரம்பமானதென்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. இவ் வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். சக்தி என்றால் ஆற்றல், வீரம், விசை, ஊக்கம் என பல பொருள் தரும். இதன் காரணமாக ஆற்றல்கள் அனைத்தையும் அருள்பவள் அன்னை பராசக்தி என்கின்றோம்.
நவராத்திரி விரத விழாவானது ஆலயங்களில் மட்டுமன்றி, வீடுகளிலும், தொழில் புரியும் நிறுவனங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ் விரதமானது இருவகை காலகட்டத்தில் வழிபடப்பெறுகிறது. ஒருவகை புரட்டாதி மாத பூர்வபக்க பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்களிலும், மற்றையது சித்திரை மாத பூர்வ பக்க பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்களிலும் சக்தியை கும்பத்திலோ அல்லது பிம்பத்திலோ வைத்து வழிபடுவர். புரட்டாதி மாத நவராத்திரியை “பாத்திர பத நவராத்திரி” எனவும், சித்திரை மாத நவராத்திரியை ‘வசந்த நவராத்திரி’ எனவும் அழைப்பர். எமது நாட்டில் சித்திரை மாத நவராத்திரி வழிபாடு பெரும்பாலும் வழக்கிலில்லை.
வடமொழிச் சொல்லாகிய “நவராத்திரம்” தமிழில் மருவி “நவராத்திரி” என அழைக்கப்படுகிறது. நவம் என்றால் ஒன்பது எனவும், மேன்மை எனவும் அர்த்தம் உண்டு. நவராத்திரி என்றால் மேன்மை தங்கிய ஒன்பது இரவுகள் என்னும் அர்த்தத்தைக் காணலாம். இவ் விழாவை ஒரு குறிக்கோளுடன் எழுச்சி வேண்டி இந்துக்கள் அனுஷ்டிப்பர்.
நவராத்திரியை ‘தசாராத்திரி’ என்று மைசூரிலும், ‘சாரதா நவராத்திரம்’, ‘துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி பூசை’ காளி, துர்க்கா என்று வங்காளத்திலும், ‘ராமலீலா’ என்று உத்தர பிரதேசத்திலும், ‘மகா நவமி’ தேவி பூசை, ‘மகாநோன்பு’ என பலபெயர் கொண்டு இடத்துக்கிடம் சிறிய மாற்றங்களுடன் உலகெங்கும் அனுஷ்டிப்பர்.
சக்தியானவள் உலக ஈடேற்றத்தின், தொழிற்பாட்டுக்கு அனுகூலமான திருவுருவங்கள் பலவற்றை தாங்குகின்றாள். எங்கும் நிறைந்த பராசக்தியை ராஜராஜேஸ்வரி, பூரணி, மூலப் பிரகிருதி எனவும், முத்தொழிலைப் புரியும் போது பிரம்மானி, வைஷ்ணவி, ருத்ராணி, கால சொரூபினி, எனவும் செல்வங்களாக விளங்கும் பொழுது தனலெட்சுமி, விஜயலெட்சுமி, தானியலெட்சுமி, வீரலெட்சுமி, செளபாக்கிய லெட்சுமி, காருண்ய லெட்சுமி எனவும் விந்தையின் வடிவெடுக்கும்போது சரஸ்வதி, நாமகள், கலைமகள், பாரதி, வாணி எனவும் பல வடிவங்கள் கொண்டும், நாமங்கள் தாங்கியும் அருளமுதம் தருவதைக் காணலாம்.
அன்னை பராசக்தியானவள் சத்துருக்கணை அழிப்பதற்காக நீலநிற துர்க்கையாக வீரத்தை அளிக்கிறாள். செல்வத்தை கொடுக்க பொன்னிறமான லக்ஷ்மியாகவும், கல்வி ஞானத்தைக் கொடுக்க வெண்ணிறமான சரஸ்வதியாகவும் உள்ளாள். இவ்வாறு முதல் மூன்று தினங்களும் துர்க்கையாகவும், அடுத்த மூன்று தினங்களும் லக்ஷ்மியாகவும், இறுதி மூன்று தினங்களும் சரஸ்வதியாகவும் வழிபாடு இடம்பெற்று பத்தாவது நாள் இம் மூன்று சக்திகளும் ஓருருவான மூர்த்தமே ராஜராஜேஸ்வரி மூர்த்தமாக கொள்ளப்படுகிறது. நவராத்திரியில் வரும் அட்டமியை மகா அட்டமி எனவும், நவமியை மகா நவமி எனவும் கூறுவர். ஆதலினால் இதற்கு “மகா நோன்பு” எனும் நாமமும் வழங்கலாயிற்று.
நவராத்திரியை அடுத்துவரும் பத்தாம் நாள் ‘விஜயதசமி’ என அழைக்கப்படும். இத் திருநாளை “வாழைவெட்டும் திருவிழா” எனும் பெயரில் கொண்டாடுவர். இந் நிகழ்வானது தேவி மகிடாசூரனை வதைத்து உலகிற்கு மகிழ்ச்சியை வழங்கியதைக் குறிக்கும். இந் நாளில் உலக மக்கள் தத்தம் தொழிலுக்குரிய மூலக் கருவியை பூசையில் வைத்து ஆசிர்வதிக்குமாறு மன்றாடுவார். இதன் காரணமாக இதனை “ஆயுத பூஜை” என்பர். இத் திருநாளில் பெரும்பாலானோர் தமது பிள்ளைகளுக்கு முதன் முதலாக வித்தியாரம்பம் செய்வர். இதனை ஏடு தொடங்குதல் என்பர். சூரியன் கன்னிராசியில் இருக்கும் காலம் புரட்டாதி மாதமாகும். சூரியன் கல்வி புத்திக்குரிய புதன்வீடாகிய கன்னி இராசியில் நிற்கும் காலமாதலாலும் இத் தினம் விசேட சக்தி நிறைந்த தினமாதலாலும் பிள்ளைகளுக்கு வித்தியாரம்பம் செய்தல் சிறப்புடையதாக கொள்ளப்படுகின்றது.
நவராத்திரி காலத்தை பூரணமாக அனுஷ்டிக்காதவர்கள் கூட ஒன்பதாவது நாளில் வீடுகளில் சரஸ்வதி பூசை செய்வர். தோத்திர சாஸ்திர நூல்கள், கல்வி கற்கும் பாட நூல்கள், முதலியவற்றை வைத்து பூசிப்பது வழமை. இதனாலேயே புத்தகங்களை சரஸ்வதியின் திருவுருவங்களாக புனிதப் பொருளாக மதிக்கும் சம்பிரதாயம் உண்டு. கல்விக் கூடங்களில் மகா நவமியை பெருவிழாவாக கொண்டாடுவர். ‘சரஸ்’ என்றால் நீர் என்றும், ஒளி என்றும் பொருள் தரும். சூரியன் உலகுக்கு வாழ ஒளியைத் தருவதால் “சரஸ்வான்” என அழைக்கப்படுகின்றாள். சரஸ்வதியின் அருள் கிடைத்தால் கல்வி பெருக்கெடுத்தோடும்.
இவ் விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமை முதல் எட்டு நாட்களும் பூசை முடித்து மாலையில் ஒரு நேரம் நீர் ஆகாரத்தையோ அல்லது உணவைச் சுருக்கி உட்கொண்டு, ஒன்பதாம் நாளாகிய மகா நவமியில் உபவாசத்துடன் பூரணமாக விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் எட்டு நாட்கள் ஒரு நேர உணவையும், ஒன்பதாம் நாளில் நீராகாரத்தையும் உட்கொள்ளலாம். ஒன்பது நாட்கள் சில காலத்தில் குறைந்து வருவதும் உண்டு. இக் காலத்தில் சரஸ்வதிக்கு மூல நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோண நட்சத்திரத்தில் உத்வாசனம் செய்யக்கூடியதாக வைத்து முன்னுள்ள நாட்களை துர்க்காவுக்கும், இலட்சுமிக்கும் பிரித்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
உபவாசம் அன்றிரவு கண் விழிப்பு, மறுநாட்களில் பாரணை பண்ணுதல், அன்றைய பகற் பொழுதையும் நித்திரையின்றிக் கழித்தல் ஆகிய விரதங்களின் பொதுவான விதிமுறையாகும்.
இவ் விரத காலத்தில் தாமரை, கோங்கு, மகிழை, செம்பருத்தி, மல்லிகை, முல்லை, ஆகிய மலர்களால் அர்ச்சித்து, வழிபடுதல் உத்தமம். ஒன்பது நாட்களிலும் முறையே நாரத்தை, வாழை, மா, பலா, கொய்யா, மாதுளை, பேரீந்து, திராட்சை, நாவல் ஆகிய பழங்களால் பூசித்தல் சிறப்பாகும். நைவேத்தியமாக முறையே ஒன்பது நாட்களிலும் வெண்பொங்கல், புளிச்சாதம், சர்க்கரைப் பொங்கல், சோறும் கறியும், தயிர்ச்சாதம், தேங்காய்ப்பால் சாதம், எலுமிச்சைப்பழச் சாதம், பாயாசம், கரும்பு, சர்க்கரை கலந்த பொங்கலுடன் கடலை, முறுக்கு முதலிய சிற்றுண்டிகளை வைத்து வழிபட வேண்டும்.
ஆகவே இந்துப் பெருமக்கள் இவ் விரதத்தின் மகிமை உணர்ந்து இதனை அனுஷ்டிப்பதன் மூலம் இறையருளும், திருவருளும், குருவருளும் கிட்டும் என்பதில் ஐயம் இல்லை.

No comments:
Post a Comment