நவராத்திரி எனும் ஒன்பது இரவுகளில் கொண்டாடப்படும் மலைமகளாம் துர்க்கை, திருமகளாம் லக்ஷ்மி, கலைமகளாம் கலைவாணி ஆகிய முத்தேவிகளுக்கும் விழா எடுக்கும் நந்நாட்களே நவராத்திரியாகும். முதல் மூன்று நாட்களும் சாத்விகம், இராஜசம், தாமஷம் எனும் மூன்று குணங்களையும் உரியதாகர் கொண்ட துர்க்கைக்கும் அடுத்து லஷ்மிக்கு மூன்று நாட்களும், இறுதி மூன்று நாட்களும் கலைவாணிக்கும் உரியனவாக கொண்டாடப்படுகிறது.
இம்மாதம் 16ம்திகதி ஆரம்பமாகி 24ஆம் திகதி விஜயதசமியுடன் இவ்விழா நிறைவுபெறவுள்ளது. புரட்டாதி மாத அமாவாசை தொடக்கம் நவமி வரையுள்ள ஒன்பது இரவுகளில் நவராத்திரி கொண்டாடப்படும். மானிட வாழ்வில் அதிமுக்கிய, அத்தியாவசியமாக, சிறப்புக்குரியனவாக கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் கருப்பொருளாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் விழா இது.
நவராத்திரி தினங்களாகிய ஒன்பது தினங்களில் பிரதமை முதல் திதியை வரையுள்ள மூன்று தினங்கள் வீரம் தரும் துர்க்கையையும், சதுர்த்திமுதல் சஷ்டிவரை செல்வம் வேண்டி இலட்சுமியையும் சப்தமி முதல் தசமிவரை கல்வி வேண்டி சரஸ்வதியையும் போற்றி வழிபாடு செய்யப்படும். பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாப்படுகிறது. கொலு வைத்து, கும்பம் வைத்து அன்னைக்கு உகந்த பிரசாதங்களை ஒன்பது நாட்களும் மாலை நேரத்தில் கொலுமுன் படைத்து திருவிளக்கேற்றி, பக்திப்பாடல்களைப்பாடி முறைப்படி வழிபடுவார்கள்.
கொலு
கொலுவைப்பது நவராத்திரியின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணினால் சிலை செய்து அதில் அம்மனை எழுந்தருளச் செய்து வழிபடின் அன்னையின் அருள் பரிபூரணமாக கிட்டும் என தேவி புராணம் கூறுகின்றது. அழகுணர்வையும் கலை நுணுக்கத்தையும் எடுத்து இயம்பும் நவராத்திரியில் முக்கிய இடத்தையும் கொலு வகிக்கிறது.
கன்னிப் பெண்கள் இப்பூசைக் காலத்தில் தேவியரை ஒன்பது அம்சமாகப்பாவித்து ஆராதிப்பது விசேடமாகும். இப்பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பட்டு வஸ்திரம் கொடுப்பது சிறப்பானதாகும். நவராத்திரி விரதத்தைமேற்கொள்வோர் ஒன்பது நாட்களும் உபவாசமிருப்பர். பெண்கள் காலை, மாலை நீராடி விரதம் இருந்து அம்பாள் பூசை செய்வர். பகலில் செய்யும் பூஜையை விட மாலையிலும் இரவிலும் பூசை செய்வதே சிறந்தது.
இதன்போது லலிதா சகஸ்ரநாமம், துர்க்கா சப்தததி, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்றைப் பாராயணம் செய்து கூட்டுப் பிரார்த்தனை செய்வது சிறந்தது.
விஜய தசமி விசேடம்
ஒன்பது நாட்களும் முத்தேவியர்களுக்கு விழாவைத்து பத்தாவது நாளான விஜயதசமியன்று ஆரம்பிக்கப்படும் சகல காரியங்களும், வெற்றியடையும் நோக்கமாகக் கொள்ளப்படும். வீடுகள், ஆலயங்கள், தொழிற்சாலைகள், மற்றும் வேலைத்தளங்கள், பாடசாலைகள் பலவற்றிலும் விஜயதசமி விமரிசையாகக் கொண்டாடப்படும்.
விஜயதசமியன்று மகிஹாசுரவதம், வன்னிமரம், வாழைமரம் வெட்டி புராணக் கதைகள் நினைவுறுத்தப்படுகிறது. வன்னிமரத்தை வழிபாடு செய்யும் வழக்கம் ஆதி காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. உமா தேவியார் களைப்புற்ற போது வன்னி மரத்தின் கீழ் ஒரு சமயம் இளைப்பாறினாராம். இராமன் சீதாபிராட்டியாரைத் தேடிப்புறப்பட்ட சமயம் வன்னிமரத்தை வலம் வந்து வணங்கினாராம். பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது தமது ஆயுதங்களை வன்னி மரத்தில் ஒழித்து வைத்திருந்து அஞ்ஞாதவாசம் முடிந்ததும் தசமியன்று தேவியை வழிபட்டு எடுத்துக் கொண்டார்களாம்.
ஆலயத்தில் விஜயதசமி
ஆலயங்களில் விஜயதசமி தினத்தன்று துர்க்கை அம்மனுக்கு விசேடபூசைகள் நிறைவேற்றப்பட்டு அம்மனை அலங்கரித்து வீதிவலங்கொண்டு வந்து மகிஷாசுரமர்த்தம் செய்யப்படும். மகிஷ என்ற அசுர சக்தி அழித்து மானுடவர்க்கத்தைக்காத்து ரட்ஷித்த துர்க்காம்பிகையின் அற்புத செயலை எடுத்து விளக்குமுகமாகவே பாவனை செய்து இவ்விழா கொண்டாடப்படுகிறது. அசுர குணங்களை நீங்கிவிட்டு அவ்விடத்தில் இரக்கம், அன்பு, பொறுமை, சாந்தம் போன்ற நற்குணங்களை அமர்த்திட வேண்டிய நிலை எய்திடவே இலக்ஷ்மி தேவியை வணங்குகிறோம். தீயவை அழிந்து நல்லவை புகுந்த இதயத்தில் நாம் விரும்பும் இசை, நடனம், நாடகம் போன்ற நுண்கலைகளால் எழும் இனிய தாக்கங்களை பதிய வைத்து எமக்குப் புத்துணர்வூட்ட வேண்டியே சரஸ்வதி தேவியை வணங்குகிறோம்.
இவற்றை நிறைவேற்றும் சக்தி எமக்குள்ளேயே பொதிந்திருக்கின்றது. அதனை உரிய முறையில் தட்டியெழுப்பி எம்மை ஒருநிலைப்படுத்தி வெளிச்சக்திகளின் பொல்லா ஆதிக்கங்களைக் கட்டுப்படுத்தி அச்சக்தியின் துணைகொண்டு எம்மனதை நாமே ஆளுகின்ற வல்லமைக்கு வித்திட வேண்டும். அரும் பெரும் ஆக்கபூர்வசெயற்பாட்டினை நல்கிடும் நவராத்திரி விழாவின் உள்ளார்ந்த தத்துவமும் சிறப்பம் சமாகும்.
No comments:
Post a Comment