Tuesday, September 4, 2012

உலகை இன்று தனது வீட்டுக்குள் அடக்கிக்கொண்டு விட்டான் மனிதன்

தொடர்பாடல் துறை எல்லை தாண்டி வளர்கிறது
 
உலகம் இன்று தொடர்பாடல் மூலம் சுருங்கி விட்ட தாகவும், கிராமமாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் நவீன தொடர்பாடல் விருத்தியின் உச்சமானது உலகை ஒரு வீடாக மாற்றியுள்ளது. அதாவது உலகில் நடக்கும் சகல நிகழ்ச்சிகளும் வீட்டிலுள்ள அனைவருக்கும் உடனுக்குடன் தெரிந்துவிடும். இந்த அமைப்பே இன்று உலகில் ஏற்பட்டு வருகிறது.

உலகில் எப்பாகத்தில் நிகழும் விடயமானாலும் உடனுக்குடன் தொடர்பாடல் மூலம் இன்று உலகம் முழுவதும் பரவி விடுகிறது. பேச்சு, காட்சி, செய்தி, படங்கள், புள்ளி விபரக்கொத்துக்கள் போன்றவற்றினை ஒருசில செக்கன்களில் உலகின் எப்பாகத்திற்கும் உடன் அனுப்பக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
 
இன்று செய்மதி பற்றியும் இணையம் பற்றியும் செல்லூலர்கள் பற்றியும், DigitalSound பற்றியும், Computer  பற்றியும் பேசும் காலமாக மாறிவிட்டது. Telephone, Fax, Telex, Tele Fax, E-mail  போன்றவற்றைத் தெரியாதவர்கள் உலகில் எப்பாகத்திலும் இருக்க மாட்டார்கள் என்ற அளவிற்கு தொடர்பாடல் அதன் வளர்ச்சியின் எல்லையைக் கண்டுகொண்டு விட்டது.
 
நவீன உலகில் தொடர்பாடல் சாதனங்கள் குரல், செய்தி, காட்சி என்பவற்றை காவிச் சென்று வழங்கு வனவாகவுள்ளன. தகவல்கள, படங்கள் போன்றவற்றை ஒருசில வினாடிகளில் உலகின் ஒரு பாகத்திலிருந்து மறுபாகத்திற்கு அனுப்புவது தற்போது நடைமுறைச் சாத்தியமாகிவிட்டது. செய்திப் பத்திரிகைகள், விளம்பரங்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்பன பிரதான தொடர்பாடற் சாதனங்களாக விளங்குகின்றன. இவை மக்களின் வாழ்வில் பாதகமான அல்லது சாதகமான விளைவுகளைத் தோற்றுவிப்பனவாகவுள்ளன. தொலைபண்ணி (Telelgraph), Telex,  தொலைபேசி, Radar, Fax  என்பனவும் இவற்றுள் அடங்குகின்றன.
 
இந்த வகையில் 1844 ஆம் ஆண்டில் சாமுவேல் மோர்ஸ் என்பவர் தொலைபண்ணி ஒன்றினை அமைத்து தந்தித் தொடர்பை முதன் முதலில் ஏற்படுத்தினார். 1876 இல் கிரகம்பெல் என்பவர் மனிதனது குரலோசையை கம்பிகள் மூலம் கொண்டு செல்லும் தொலை பேசியைக் கண்டுபிடித்தார்.
1895 இல் மார்க்கோணி என்பவர் ரேடியோ அலைகள் மூலம் செய்திகளை அனுப்பும் முறையை அறிமுகப்படுத்தினார்.
 
வானொலி கம்பியில்லாத் தொலைபேசி என்பவற்றிற்கும் இவரே அத்திவாரமிட்டார். கண்களுக்கு எட்டாதவற்றை ரேடியோ அலைகள் மூலம் கண்டறிய ரேடார் கருவி உதவுகிறது. இதனை முதலில் அமைத்த பெருமை ரொபாட் வொட்கன் வொட் என்பவருக்குரியது.
 
இவ்வாறு அன்றைய காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புக்களே இன்றைய நவீன உலகில் பாரிய தொடர்பாடல் விருத்திக்கு அத்திவார மிடுகின்றன. இந்தவகையில் ‘ரேடார்’ என்பது ரேடியோ அலைகளைத் துணை கொண்டு கண்ணுக்கெட்டாத பொருட்களைக் காண்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகும்.
 
 (Rader = Radio Detecting and Ranging)  இந்த அலைகள் எதிரொலி மூலம் ஒருபொருள் உள்ள தூரத்தைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. விண்ணில் மிகவுயரத்தில் பறக்கின்ற விமானங்களை ஒளியின் வேகத்தில் செல்லும் இச்சைகள் விமானத்தை தொட்டு மீண்டும் ரேடார் நிலையத்தில் எதிரொலிக்கின்றன. விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ரேடார் பயன்படுத்தப் படுகின்றது.
 
தகவற் தொடர்பு சாதனங்கள் நாடுகளையும் கண்டங்களையும் இணைத்து உள்ளன. தொலைக்காட்சி, வானொலி என்பன மூலமாக ஒளி/ ஒலி பரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் அன்றாட வாழ்வின் அம்சமாகிவிட்டன. பெரிய நகரங்களில் மத்திய தொலைத்தொடர்பு நிலையம் (Central Exchange)நிறுவப்பட்டு, மூலை முடுக்கெல்லாம் தொலைபேசி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
கம்பிகள் மூலமாகவோ, அல்லது நிலத்துக்கு அடியில் பல மையக் கேபிள்கள் மூலமாகவோ இவ்வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இணை அச்சுக் கேபிள்கள் மூலம் நகரங்களுக்கிடையிலான தொலைவுத் தொலைபேசிகள் (Trunk Telephone)  உள்ளன. இதனால் ஒரே சமயத்தில் பல எண்ணிக்கையில் தொலைபேசித் தொடர்புகள் சாத்தியமாகின்றன.
 
 
தொலைவுத் தொலைபேசிகள் மின் தட்டச்சுக்களுடன் (Electric Tele Type write)  இணைக்கப்பட்டு அச்சுச் செய்தியை அனுப்பும் Telex  வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.Fascimile முறையில் படங்களுடன் அச்சடிக்கப்பட்ட ஒரு பத்திரிகையின் முழுப் பக்கம் முழுமையாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு Fax இயந்திரங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.
 
முதன் முதல் ஐக்கிய அமெரிக்கா ‘ரெல்ஸ்ரார்’ என்ற செய்மதியை விண்வெளிக்கு அனுப்பியதுடன் சர்வதேசத் தொலைச் செய்திப் பரிமாற்றத்தில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது. இதன் பின்னர் விண்வெளிக்கு ஏவப்பட்ட ‘ஏர்லிபேர்ட்’ என்ற செய்தி தொலைக்காட்சிப் படங்களையும் வான் ஒளிப் படங்களையும் புவிக்கு அனுப்புவதுடன் அத்திலாந்திக் சமுத்திரமூடாகச் செய்திகளைப் பரிமாறவும் உதவுகின்றது.
 
செய்மதி புவியைச் சுற்றும் வேகம், பூமி தன்னைத்தானே சுற்றும் வேகத்திற்குச் சமனானதாகும். அதனாற் செய்மதி ஒரு குறிக்கப்பட்ட இடத்தில் தங்கியுள்ளது. பல்வேறு நாடுகளும் இன்று தத்தமது செய்திப் பரிமாற்றத்திற்காகச் செய்மதிகளை வானில் ஏவிப் பயன் கொள்கின்றன.
 
இந்தியா இன்சாட் என்ற செய்மதிகள் மூன்றின் மூலம் தனது பரந்த நாட்டின் தகவற் தொடர்பை நிறுவியுள்ளது. செய்மதிகளுடன் கணனிகளை இணைத்து விமானம், புகைவண்டி என்பனவற்றின் பயண முன் இட ஒதுக்கீடுகளை செய்வது சாத்தியமாகி விட்டது.
 
‘ஒளியியல் தொடர்முறை’(Optical Communication) ஒன்று இன்று அறிமுகமாகியுள்ளது. ஒளிக் கதிர்களைத் தொடர்புத் துறையில் பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. செப்புக் கேபிள்களுக்குப் பதிலாக இதில் கண்ணாடி இழைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
இவை மின் சைகைகளை ஒளிச் சைகைகளாக மாற்றிக் கிரகிக்கும் ஒளித் தொடர்ச்சிகளாக இக்கண்ணாடி இழைகளில் தகவல்கள் செல்கின்றன. தகவல்கள் பெறும் இடத்தில் இந்த ஒளித் துடிப்புகள் மீண்டும் பழைய தகவல் வடிவிற்கு மாற்றப்படுகின்றன. இந்த நுண்ணுழைகள் மூலம் குரல், தொலைக்காட்சிப் படங்கள், கணனிப் புள்ளி விபரங்கள் போன்றவை மிகுந்த வேகத்துடன் பரிமாற்றப்படுகின்றன.
 
கார் தொலைபேசிகள் எனப்படும் Cellular Mobile  தொலைபேசிகள் இன்று எல்லா நாடுகளிலும் முதன்மை பெற்று வருகின்றன. இது கையில் செல்லும் இடம் எங்கும் காவிச் செல்லக்கூடியது. குறித்த பரப்பு எல்லைக்குள் எத்தொலைபேசியுடனும் தொடர்புகொள்ளக் கூடியது. மேலும் ஒருவழித் தொலைத் தொடர்பு கொள்கின்ற ரேடியோ பேஜிங் (Radio Paging)  என்ற தொலைபேசியும் பாவனையிலுள்ளது. இதுவும் செல்லுமிடமெங்கும் காவிச் செல்லக்கூடியது.
 
Fax எனப்படும் எலெக்ரோனிக் தபால் சேவை(Electronic Mail)  இன்று உலக நாடுகளில் முக்கிய செய்திப் பரிமாற்றம் ஆகிவிட்டது. இத்தபால் சேவைக்கு ஒரு கணனி, தொலைபேசி  Moderm,  எனப்படும் இயந்திரம் என்பன தேவை. தொலைபேசி மூலம் அறிவித்துவிட்டு, குறித்த இலக்கத்தைப்  Fax கணனியில் பதிவுசெய்து விட்டு, நாம் அனுப்ப விரும்பும் கடிதத்தை அல்லது ஆவணத்தை உரிய செல்வழி செலுத்த அக்கடிதத்தின் அல்லது ஆவணத்தின் பிரதி குறித்த இடத்திலுள்ள  Fax  கணனியில் வெளிவரும்.
 
 
VSAT (Very Small Aperture Terminal) எனப்படும் செய்திப் பரிமாற்றத் தொழில்நுட்பம் ஒன்று இன்றுள்ளது. செய்மதியை அடிப்படையாகக் கொண்டது. வர்த்தக தொடர்பாடலுக்கு VSAT முறை உதவுகின்றது. ஒரு வர்த்தக நிறுவனத்தின் மத்திய நிலையத்தில் நிறுவப்பட்ட VSAT மூலம் அந்தவர்த்தக நிறுவனத்தில் பல்வேறு கிளைகளுக்கும் காலதாமத மின்றித் தகவல்களை ஒரே முறையில் அனுப்ப இச்செய்திப் பரிமாற்ற முறை உதவுகிறது.
 
இன்று 02 நிறுவனங்கள் அல்லது வழங்குநரும் நுகர்வோரும் தமக்கிடையே வழக்கமான வர்த்தகக் கட்டளைகளைப் பரிமாறிக் கொள்ள  EDI (Electronic Data Interchange)  எனும் முறை இன்றைய நவீன யுகத்தில் பயன்படுகின்றது. தத்தமது கணனிகள் மூலம் இந்தச் செய்திப் பரிமாற்றம் நடத்தப்படுகின்றது. இம்முறை மலிவானதும், விரைவானதுமாகும். ஒரு கணனியில் அச்சிட்டு அறிவிக்கப்படும் செய்தி, மறுபகுதிக் கணனியில் தகவலாக வெளிவரும்.
 
Voice Mail  (குரல் தபால்) எனப்படும் செய்திப் பரிமாற்றம் இன்று மிகவும் பிரபல்யமானதொரு முறையாகும். தொலைபேசி வசதியில்லாத ஒருவர் Voice Mail ஒன்றினை தொலைபேசிப் பரிவர்த்தனை நிலையத்தில் பதிவு செய்யலாம். அவருக்கு ஒரு இலக்கம் வழங்கப்படும். அந்த இலக்கத்திற்கு வருகின்ற தொலைபேசி உள்பதிவு செய்யப்படும். அவற்றை அவர் அன்று மாலை அல்லது குறித்த நேரமொன்றில் ஒரு தொலைபேசி மூலம் கேட்டுக் கொள்ள முடியும். எனவே இந்த தொடர்பாடல் வசதிகளின் விருத்தியால் உலகம் இன்று சுருங்கிவிட்டது. உலகின் ஒரு மூலையில் நடக்கின்ற ஒரு நிகழ்வு உடனுக்குடன் உலகெங்கும் செய்தியாகப் பரவ தொடர்பாடல் வளர்ச்சியின் விருத்தியே அடிப்படைக் காரணமாகும்.
 
வானிலை நிலைமைகளை முன் கூட்டியே அறிந்து கொள்ளவும், ஏற்படக்கூடிய அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து தவிர்த்துக் கொள்ளவும், வர்த்தக உறவுகளையும், தகவல்களையும் பரிமாறிக் கொள்ளவும் அரசியல் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் தொடர்பாடல் வசதிகள் பாரிய பங்களிப்புச் செய்கின்றன. ஆகவே இன்று விரைந்து சென்று கொண்டிருக்கும் உலகின் வளர்ச்சிக்கு தொடர்பாடல் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

No comments:

Post a Comment