Saturday, August 25, 2012

முதுமையிலும் இளமையைப் பேணுவதில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டியவை

ஒருவர் முதுமையாகவும், இளமையாகவும் இருப்பது போல் காட்டுவது இரத்த குழாய்கள்தான். இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம்தான் நம் உடலின் ஆரோக்கியம். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இரத்தக் குழாய்கள்தான் திசுக்களுக்கு இரத்தத்தைக்கொடுக்கின்றன.
 
கண்ணுக்குப் புலப்படாத பல இலட்ச நுண் இரத்தக் குழாய்கள் உடலில் உள்ளன. இதயத்தின் இடது பகுதியில் துவங்கும் இரத்தக் குழாய் மகா தமனியாக வெளியே வந்து உடலுடன் எல்லா உறுப்புகளுக்கும் பிரிவுகளாக சென்று இரத்தம் கொடுத்து, உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தையும் உயிர் வாழ வைக்கிறது.
 
இது ஆரோக்கியமாக இருந்தால், மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும். நமது உடலில் உள்ள திசுக்கள் அழியும் தன்மை உடையது. நமது உடலில் உள்ள தோல் நமக்குத் தெரியாமல் உதிர்ந்து புதிய மேல் தோல் திசுக்கள் உண்டாகின்றன.
 
பல்லாயிரக்கணக்கான நுண் இரத்த நாளங்கள் இருக்கின்றன. இவைகள் ஆரோக்கியமாக சுருங்காமல் இருந்தால், தோல் சுருங்காமல் இளைமையாக இருக்கும். அதே போல் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகிறது.
 
நம் வாழ்க்கை தரம், தனி மனித ஒழுக்கம், நடை பயிற்சி, யோகா, இயற்கையான உணவு வகைகள், அமைதி, பொறுமை, எளிமை ஆகியவை உடலில் உள்ள இரத்த நாளத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன. புகை பிடித்தல், போதை வஸ்துக்கள் உபயோகப்படுத்தவது, சீட்டாடுவது, விபசாரிகளோடு சகவாசம் வைத்து, நெறியற்ற வாழ்வு வாழ்வது ஆகியவை இரத்த நாளத்தை இறுக்கிவிடும். இதனால் இதயம் சிறுநீரகம், மூளை, கண் சிதைவு ஏற்படுகின்றன. இதனால் நடு வயது மரணம் ஏற்படுகிறது.
 
தமனி இறுக்க நோய் தாக்குவதற்குக் காரணங்கள் பல உள்ளன. இரத்தக் குழாய் இறப்பர் குழாய் போல விரிவடைந்து, சுருங்கும் தன்மை கொண்டது. எந்த அழுத்தத்தையும் தாங்கும் தன்மை கொண்டது. இந்த தன்மை கொண்ட இரத்தக் குழாய் இரத்த இறுக்க நோயால் இரும்புக் குழாய் போல ஆகிவிடுகிறது.
 
இதற்குக் காரணங்கள் நிக்கோடின் என்ற நச்சுப் பொருள், இரத்த நாளத்தின் உட்சுவரான என்டோ தீலியத்தை பாதித்து விரிசல் உண்டாக்கி விடுகிறது. விரிசலில் கெட்ட கொழுப்பு நுழைந்து இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுத்துகிறது.
 
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இல்லாததால் இரத்தக் குழாய் நலிவடைந்து விடுகிறது. அதிகமான கொழுப்புள்ள மாமிசம் , உணவு வகைகளிலுள்ள கெட்ட கொழுப்புக்கள் இரத்த நாளத்தில் படர்ந்து தடித்து விடும். இதனால் நிரந்தரமாக இரத்த அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. இரத்த அழுத்தத்தை குணமாக்க முடியாது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
இளமையில் உடலிலுள்ள இரத்தக் குழாய்கள் அனைத்தும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் இரத்த ஓட்டம் சிராக உடலிலுள்ள எல்லாப் பகுதிகளுக்கும் செல்கிறது. இந்த தனித் தன்மையைக் காப்பாற்றுவது தான் மிக முக்கியமானது.
 
உணவு வகைகள், பணம் அதிகமாக கிடைக்கிறது என்று மது குடிப்பது, புகை பிடிப்பது, போதைவஸ்துக்கள் உட்கொள்வது, சோம்பேறியான வாழ்க்கை அகியவை இரத்த நாளத்தை பாதித்து விடும். தயிர், வெண்ணெய், நெய் வைத்த பாத்திரத்தை அவை உபயோகித்த பிறகு, பாத்திரத்தின் உட்சுவரில் ஒட்டி இருப்பது போல தான் இந்தக் கெட்ட கொழுப்பு படர்ந்து, இரத்தக் குழாயை சேதப்படுத்துகிறது.
 
இளமைப் பருவத்தில் இருக்கும் இரத்தக் குழாயை பாதுகாத்து, அதே வடிவத்தில் கொண்டு செல்பவன்தான் ஆரோக்கியமான மனிதன். உடற் பயிற்சியால் இரத்த ஓட்டம் அதிகமாகிறது. காரணம் இரத்தக் குழாய் சுருங்கி விரிவடையும் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இதயமும், பலமுள்ளதாக பாதுகாக்கப்படுகிறது.
 
இதயத் துப்பு காரணமாக, கரோனறி இரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுவதில்லை. மேலும் இரத்த ஓட்டம் போதுமான அளவு சிறுநீரகத்திற்கு சென்று சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. உடற்பயிற்சி செய்தவுடன், சிறுநீர் உந்துதல் ஏற்பட்டால், அது சிறுநீரகம் நன்கு செயல்படுகிறது என்பதற்கான அறிகுறி.
 
உடற்பயிற்சி செய்யும் போது சுத்தமான பிராண வாயு, மூளைக்கு செல்வதால் மூளை புத்துணர்வு பெறுகிறது. உடல் முழுவதும் புத்துணர்வு பெற்று சுறு சுறுப்பாகிறது. இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரிகிறது. எல்லாரும் நடைப்பயிற்சிக்கு செல்கின்றனர். நாமும் செல்வோம் என சப்பாத்து அணிந்து போவது தான் முக்கியமாகத் தெரிகிறது.
கோவில் குளங்களில் தண்ணீர் படியில் கால் வைக்கும் போது ஜாக்கிரதையாக வைக்கிறோம். காரணம், தண்ணீர் தேங்கிய படிகளில் பாசி படர்ந்து விடுகிறது. இதனால் கால் வழுக்கி குளத்தில் விழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. அது போல இரத்தக் குழாய் இரத்த ஓட்டமில்லாமல் இருந்தாலோ இல்லை. இரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலோ இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பு, சீனி இரத்தக் குழாய் சுவரின் உட்பகுதியில் படர்ந்து விடுகின்றன.
 
நாளடைவில் இரத்தத்தில் உள்ள தாதுப் பொருள்கள் அதன் மீது படிந்து கட்டியாக மாறிவிடும் இதனால் மாரடைப்பு, மூளை ஸ்ட்ரோக், சிறுநீரக செயலிழப்பு, கால் மரத்துப் போதல் போன்ற சிக்கல் ஏற்படுத்தும்.
 
முதுமையில் ஒருவர் நீண்ட நாள் படுக்கையில் இருந்தால் காலிலுள்ள இரத்த நாளத்தில் இரத்த ஓட்டமில்லாமல் இரத்தம் உறைந்து கட்டியாகி நுரையீரல், தமணி அடைப்பு ஏற்படுத்தி, திடீர் மரணத்தை ஏற்படுத்துகிறது. இதே போல நீண்ட நேரம் கார் பயணம், விமான பயணத்தின் போது, இரத்தம் உறைய வாய்ப்பு உள்ளது. முதுமையில் ஏற்படும் விளைவுகள் இவை. மனிதன் சுறு சுறுப்பாக இருக்க வேண்டும். பந்து போல எழும்பி வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
 
சமீபத்திய ஆய்வில் 60 முதல் 80 வரையுள்ள சுறு சுறுப்பானவர்கள், தினம் நடைப் பயிற்சி, நல்ல உணவு வகை உண்டு. எளிமையாக எங்கும் எப்போதும் எழுந்து நடமாடி தூய்மையான எண்ணங்களுடன், சமுதாய நல குறிக்கோளுடன் தனி மனித ஒழுக்கத்துடன் திகழ்வதாகத் தெரிய வந்துள்ளது என்கிறார். சென்னை மருத்துவ நிபுணர் சி. எம். கே. ரெட்டி.
இரத்தக் குழாயில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படுவதை தடுக்க, புதிய நனோ துகள்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இரத்தத்தில் கொழுப்பை சுமந்து செல்லும் துகள்கள் இரத்த குழாயில் படிந்து விட்டால் அது கெட்ட கொழுப்பு என்றும், கொழுப்பை கல்லீரம் வரை எடுத்து சென்றால் அது ‘நல்ல கொழுப்பு’ என்றும் கூறப்படுகிறது.
 
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அன்ட்ரீ நெல் தலைமையிலான விஞ்ஞானிகள், நனோ தொழில் நுட்பத்தில் தங்கத்தை சேர்த்து செயற்கைத் துகள்களை உருவாக்கியுள்ளனர்.
 
இந்த செயற்கைத் துகள்களை இரத்தத்தில் செலுத்தினால் அவை இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் செய்கிறது. அது மட்டுமல்லாது, இரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பையும் சுத்தம் செய்கிறது. தற்போது சோதனைக் கூட அளவில் இருக்கும் இந்த துகள்களை பல விதங்களிலும் பயன்படுத்துவது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment