Sunday, July 10, 2011

இறைக்கிற கிணறுதான் ஊறும்

மனிதர்கள் மட்டுமல்லாமல், உயிர்கள் அனைத்துமே இன்பத்தை அடையவும், துன்பத்தை விலக்கவும் தொடர்ந்து முயல்கின்றன. உலகில் நாம் விரும்பிப் பிறக்க வில்லை. நாம் பிறக்கும் இடமும், சூழலும் நம் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதல்ல.

பிறந்த பிறகு சூழ்நிலை நமக்கு இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ தருகிறது. சூழ்நிலை நமக்கு இன்பம் தருவதாக இருப்பின் அதை விரும்புகிறோம், மகிழ்கிறோம். அதுவே நமக்கு துன்பம் தருவதாக இருப்பின் அதை வெறுக்கிறோம், கவலை அடைகிறோம்.
 
நம் சூழ்நிலை நமக்கு இன்பம் தருவதாக அமைய வேண்டுமானால் நமக்கு பணம் பதவி, புகழ் ஆகியவை தேவைப்படுகின்றன.
 
அவற்றிலும் பணம் முக்கிய பங்கை வகிக்கிறது. பணத்தின் உதவியால் பதவிகளைப் பெற முயல்கிறோம். பணத்தின் துணைகொண்டு புகழைப்பெற முயல்வோரும் உண்டு. புகழைப் பயன்படுத்தி, பதவியைப் பெற்று மேலும் பணம் சேர்க்க முயல்வோரும் உண்டு.
 
இவ்வாறாக, மனித வாழ்க்கை பணத்தைச் சுற்றியே சுழல்வதை எளிதாக அறிய முடிகிறது. பணம் என்னும் அச்சாணி இல்லாமல் வாழ்க்கை என்னும் வண்டி ஓடுவதில்லை. ஆகவே, பணத்தைச் சேர்த்துக் கொள்ள மனிதர்கள் போட்டி போட்டு ஓடுகிறார்கள். சிலர் மட்டுமே நெறிமுறைகளை வகுத்துக்கொண்டு உழைத்துப் பணம் சேர்க்கிறார்கள்.
 
பலர் எதைச் செய்தாவது, எப்படிச் செய்தாவது பணம் சேர்க்க முயன்று, பணத்துடன் பழியையும் பாவத்தையும் சேர்த்துக்கொள்கிறார்கள். நீங்கள் பணத்தை எவ்வாறு சேர்க்கிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு சேர்த்த பணத்தை என்ன செய்கிaர்கள் என்பதும் முக்கியமானது. பணம் சேர்த்துக் குவித்த பிறகு அது உங்களைத் தவறான நடைமுறைகளுக்குத் தள்ளிவிடப் பார்க்கும்.
 
தேவைக்கு மேல் பணம் சேரும்போது ஆடம்பரமாகச் செலவு செய்யத் தோன்றும். அதில் மன நிறைவு ஏற்படாதபோது பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்தத் தோன்றும். அதற்குத் தடை ஏற்படும்போது பிறர் உரிமை களை ஆக்கிரமிக்கத் தோன்றும்.
 
 
எந்த இன்பத்தை அடைவதற்காகப் பணம் சேர்க்கத் தொடங்கினோமோ, அந்த இன்பம் வாழ்க்கையிலிருந்து விடைபெற்று விடும். பிறகு இன்பத்தை விரும்பிச் சேர்க்கப் பட்ட பணம் துன்பத்தையே மேலும் மேலும் பெருக்கும்.
 
 
வாழ்க்கையிலே இன்பத்தை அடைய பணம் தேவைதான். ஆனால் பணமே இன்பத்தைத் தந்து விடுவதில்லை. அன்பைப் பெற முடியாமல், ஆதரவு காட்டுவாரின்றி அநாதையாக இறந்து போன கோடீஸ்வரர் களையும் உலகம் கண்டிருக்கிறது.
 
 
பணத்தைச் சேர்த்துக் குவித்து விட்டு நிம்மதி அடைய முடியாமல் தற்கொலை செய்துகொண்ட செல்வந்தர் பலருண்டு.
 
அப்படியானால் பணம் இன்பத்தைத் தரும் பொருளா? துன்பத்தைத் தரும் பொருளா? பணமும் சேர்க்க வேண்டும், நிம்மதியாக மனநிறைவுடன் வாழவும் வேண்டும். அதற்கு என்ன வழி?  வழி இருக்கிறது. அறிஞர்களும், அறநூல்களும் கூறும் முறையில் தொழிலையும், வணிகத்தையும் செய்து பொருள் சேர்த்து, அப்பொருளைக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்த விரும்புகிறவர் எடுக்க வேண்டிய இரண்டு முடிவுகள் என்ன?
 
 
ஒன்று: நேர்மையான உண்மையின் அடிப்படையிலான, பிறருக்குத் தீங்கு தராத தொழில் அல்லது வணிகத்தின் மூலம் மட்டுமே பணம் சேர்ப்பேன் என்று முடிவெடுக்க வேண்டும்.
 
இரண்டு: சேர்த்த பணத்தை வைத்து ஆடம்பரமாக வாழமாட்டேன். பிறர் மீது ஆதிக்கம் செலுத்த மாட்டேன். பிறர் உரிமைகளை ஆக்கமிக்க மாட்டேன்.
சேர்த்த செல்வத்தில் பாதிக்கு மேற்பட்ட பகுதியை, என்னைச் சுற்றி வாழும் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவிற்காகவும், உடைக்காகவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் பகிர்ந்து கொடுத்து அவர்கள் முகம் மலர்வதைப் பார்த்து, நான் அகம் மலர்வேன் என்று திட்டவட்டமாக முடிவெடுக்க வேண்டும்.
 
 
இந்த இரண்டு செயல்களைச் சரியாகக் கைக்கொண்டால் நீங்கள் இவ்வுலகில் நிம்மதியாக மட்டுமல்ல புகழோடும், பெருமையோடும், மகிழ்ச்சியோடும் வாழ முடியும். இவ்விடத்தில் உங்கள் உள்ளத்தில் சில வினாக்கள் தோன்றலாம். நான்தான் உழைத்தேன். நான்தான் பணம் சேர்த்தேன். எதற்காக நான் பகிர்ந்து கொடுக்க வேண்டும்?
உழைத்தது நீங்கள் தான் என்பதும், சேர்த்தது நீங்கள் தான் என்பதும் உண்மை. ஆனால், அதனாலேயே நீங்கள் சுயநலமாக வாழ்வதற்கு உரிமை பெற்றவர் அல்ல.
 
 
இறைவன் இந்த பூமியைப் படைத்தான். சூரிய ஒளியையும், காற்றையும், மழை நீரையும் உங்களுக்கு இலவசமாகவே கொடுத்தான். அவற்றிற்கு நீங்கள் விலையேதும் கொடுக்கவில்லை. அல்லது வரி ஏதும் கட்டவில்லை.
 
 
இறைவன் இலவசமாக, அபரிதமாகக் கொடுத்த நலன்களைப் பயன்படுத்தியே நீங்கள் உழைத்தீர்கள். செல்வம் சேர்த்தீர்கள். ஆகவே நீங்கள் இறைவனுக்குக் கடன்பட்டிருக்கிaர்கள்.  பட்ட கடனைத் திருப்பித் தர வேண்டாமா? இறைவனுக்கு எப்படி திருப்பித் தருவது? முடியாது. தந்தையாகிய இறைவனுக்குத் தரவேண்டிய கடனை அவனுடைய மக்களாகிய பிற மனிதர்களுக்கு, இவ்வுலகில் வாழும் உங்கள் சகோதரராகிய ஏழை, எளியவரிடம் திரும்ப ஒப்படையுங்கள். இதைச் செய்யாவிட்டால் நீங்கள் இறைவனையே ஏமாற்றுகிaர்கள்.
 
 
அடுத்து இவ்வுலகிலுள்ள மின்சார விளக்கு, விரைந்து செல்லும் வாகனங்கள், விரைந்து தொழில் முடிக்கும் கணிப் பொறிகள், பல்வேறு இயந்திரங்கள், நோய்களைப் போக்கும் மருத்துவ முறைகள், மருந்துகள், அறிவியற் சாதனங்கள் இவற்றை யார் கண்டுபிடித்தார்கள்? உங்களைப் போன்ற மனிதர்கள் தான்.
 
ஏன் கண்டுபிடித்தார்கள்? எதற்காகக் கண்டுபிடித்தார்கள்? எனக்குப் பின்னால் வாழும் மக்கள் சமுதாயம் இன்னல் நீங்கி இன்பம் பெற வேண்டும் என்னும் நல்ல நோக்கம் தான் காரணம்.
 
 
நீங்கள் வசதியாக வாழ்வதற்காக, வாழ்க்கையை அனுபவிப்பதற்காக அவர்கள் ஏன் உழைத்தார்கள்? ஏன் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தார்கள்?
 
 
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் தனக்குப் பிறகு வாழும் மனித சமுதாயத்திற்கு ஏதேனும் பயனுள்ள பொருளை, நிறுவனத்தை உருவாக்கி நிலை நிறுத்த வேண்டும் எனக்காக மட்டுமல்ல, சமுதாயத்திற்காகவும் என் வாழ்க்கை பயன்படவேண்டும் என்னும் உயர்நோக்கம் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட மாமனிதர்களின் கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் வாழவில்லையா? செல்வம் சேர்க்கவில்லையா? அப்படியாயின் அவர்களுக்கு நீங்கள் நன்றிக் கடன்படவில்லையா?
 
நன்றிக்கடனை எப்படித்திருப்பிச் செலுத்துவது? உங்களுக்குப் பின்னர் வாழப்போகும் மனித சமுதாயத்திற்காக உங்கள் பங்கு என்ன? ஆகவே பகிர்ந்து கொடுங்கள்.
 
இறைவனிடம் நாம் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தவும், மாமேதைகள் நமக்குச் செய்த நன்றிக் கடனைத் தீர்க்கவும் நமக்குள்ள ஒரே வழி பகிர்ந்துகொடுத்தல்தான்.
 
 
பகிர்ந்து கொடுப்பது என்றால் எதை? எந்த அளவுக்கு உங்களிடம் உள்ள அறிவை மற்றவருக்குப் பகிர்ந்துகொடுங்கள். திறனைப் பகிர்ந்து கொடுங்கள், ஆலோசனையைப் பகிர்ந்து கொடுங்கள், உழைப்பைப் பகிர்ந்துகொடுங்கள், உணவைப் பகிர்ந்து கொடுங்கள், இறைவன் உங்களுக்கு என்னென்ன நலன்களைக் கொடுத்தானோ, அவை அனைத்தையும் பகிர்ந்து கொடுங்கள்.
 
 
எந்த அளவுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்னும் கேள்வி எழுகிறதா? நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்: நிதி குறைந்தவர் காசுகள் தாரீர். அதுவும் இல்லாதவர் வாய்ச்சொல் அருZர். உங்கள் வருமானத்தில் நூற்றில் ஒரு பங்கு, இரண்டு பங்கு என்று தொடங்கி, உங்கள் வருமானம் உயர உயர ஐந்து சதவீதம், பத்து சதவீதம் என்று உயர்த்தி, தேவையை மீறிய வருமானம் வரும்போது, பாதிப் பங்கை நீங்கள் பகிர்ந்து கொடுத்தாலும் பாதகமில்லை. இறைக்கிற கிணறுதான் ஊறும் வற்றாது.
 
 
பகிர்ந்து கொடுத்தல் மேன்மை யானதுதான். யாருக்குப் பகிர்ந்து கொடுப்பது? தேவைப்படுவோர்க்கு நேரடியாக கொடுங்கள். இடைத் தரகர்கள் எவரும் வேண்டாம். பகிர்ந்து கொடுப்பதற்கு எத்தனை வழிகள், வாய்ப்புகள் உள்ளன. தேடிப்பாருங்கள்.
 
உங்கள் பிறந்த நாள் வருகிறதா? மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமா? ஆயிரம் ரூபாய் ஒதுக்குங்கள், உங்கள் அருகில் உள்ள அநாதை இல்லத்தைத் தேடிக் கண்டிபிடியுங்கள். அதிகாலை நேரத்தில் இனிப்புப் பெட்டிகளுடன் செல்லுங்கள், குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குங்கள். அவர்கள் ஆர்வத்துடன், முக மலர்ச்சியுடன் தின்பதை அன்போடு பாருங்கள்: உங்களுக்கு ஆனந்தக் கண்ணீர் வரும்.
 
 
பள்ளிகள் திறந்து விட்டனவா? பத்துப் பேருக்காவது சீருடை வாங்கிக் கொடுங்கள், ஐந்து பேருக்காவது புத்தகம், குறிப்பேடுகள் வாங்கிக் கொடுங்கள், முடிந்தால் ஒரு ஏழைக் குழந்தையின் ஆண்டின் படிப்புச் செலவை முழுதாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
 
 
இவ்வாறாக பகிர்ந்து கொடுக்க மனமின்றி தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் பணத்தைப் போற்றி வைத்தால் என்ன நடக்கும்?
அடுத்த தலைமுறையில் சோம்பேறிகளாலும், ஊதாரிகளாலும் அச்செல்வம் அழிக்கப்படும். எதை எண்ணிச் செல்வம் சேர்க்கிறோமோ அச்செல்வம் அவர்களுக்கு நன்மை செய்வதை விடுத்து தீமையே செய்கிறது.
 
 
கொடுங்கள்! அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்னும் ஏசுக் கிறிஸ்துவின் மொழி மெய்யானது. நிறைவான மனதுடன் நீங்கள் மற்றவருக்கு என்ன கொடுக்கிaர்களோ அது பல மடங்காக உங்களிடம் திரும்பி வரும்.
 
 
எவருக்குக் கொடுத்தீர்களோ, அவரிடம் இருந்தே நேரடியாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம். வேறு பல திசைகளிலிருந்து, நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாக உங்களுக்குக் கிடைக்கும். தர்மம் தலைகாக்கும் என்பது சாதார மொழி அன்று.
 
பகிர்ந்து கொடுப்பதால் நீங்கள் அடையக்கூடிய பேரின்பத்தை அது வலியுறுத்துகிறது.  ஆகவே பணம் சேர்ப்பதில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்களோ அவ்வளவு பகிர்ந்து கொடுப்பதில் ஆர்வம் செலுத்துங்கள். பகிர்ந்து கொடுத்தல் பெரும் பேரின்பம்.

No comments:

Post a Comment