Monday, December 27, 2010

கசூரினா கடற்கரையில் சீரழியும் தமிழர் கலாச்சாரம்! களைகட்டும் காதல் லீலைகள்

அன்று விடுமுறை நாள். அன்றைய பொழுதைக் கழிப்பதற்கென கசூரினாக் கடற்கரைக்கு எனது நண்பர்களுடன் சென்றிருந்தேன். நாம் சென்றடைந்த நேரம் நண்பகலை நெருங்கியிருந்தது. கடலலைகள் சீறிவருவதும் கரையை முத்தமிட்டுச் செல்லுவதுமாக இருந்தன. அந்தக் கடலன்னையின் வனப்பில் என்மனம் சற்று லயித்திருந்தது. அந்த நாள் ஞாபகங்கள் மின்னல் கீற்றுப் போல் என் மனதில் தோன்றி மறைந்தன.

அந்தக் கடல் அன்னையின் எழிலைச் சிறிது நேரம் வெறித்துப் பார்த்தபடி இருந்தேன். அதன்பின் எனது விழிகளைச் சுழலவிட்டு சுற்றுமுற்றும் என் பார்வையைச் செலுத்தினேன். அப்போது நான் கண்ட காட்சிகள், நான் வந்தது கொழும்பு 'கோல்பேஸ்' கடற்கரைக்கா அல்லது கசூரினாக் கடற்கரைக்கா என்ற மயக்கத்தைத் தோற்றுவித்தது.

கடற்கரையிலுள்ள சில மறைவிடங்களில் ஆங்காங்கே முளைத்திருந்த காதலர்கள் தமது காதல் காட்சிகளை அரங்கேற்றியபடி இருந்தனர். சிலரோ அவர்களின் காதல் லீலைகளை இரசித்தபடி இருந்தனர். பார்ப்பதற்கே அருவருப்பூட்டும் அளவிற்கு அவர்களின் விரசமான காட்சிகள் என் கண்முன் விரிந்தன.

இப்படியாகக் கடற்கரையினிலே காதல் ஜோடிகள் தங்கள் காதல்களை வளர்த்தபடி இருந்தனர். அக்கணநேரத்தில் இன்னோரு ஜோடியின் பிரசன்னம் என் கண்ணில் பட்டது. கையோடு கொண்டுவந்திருந்த சிறியகுடை ஒன்றை விரித்துப் பிடித்துக்கொண்டாள் அந்த இளநங்கை. அக்குடைக்குள் வெயிலுக்கு பயந்து அடைக்கலம் புகுவதுபோல் அவளுடன் வந்த ஆண்மகன் புகுந்து கொண்டான். அந்தச் சிறிய குடை தந்த நிழலில் இருவரும் தோளோடு தோள் உரசியபடி தமது காதல் ஆராய்ச்சியில் மிதந்திருந்தனர்.

இப்படியாக சொல்வதற்கே கூசும் அளவிற்கு காதல் ஜோடிகளின் விரசக் காட்சிகள் என் மனச்சிறைக்குள் பதிவாகியபடி இருந்தன. ஒரு சில காதல் ஜோடிகள் வெயிலின் உக்கிரத்தாலோ என்னவோ அலைகளில் கால்களை நனைத்தபடி காதல் என்ற இன்ப வெள்ளத்தில் திளைத்திருந்தனர். சிலர் ஒன்றாகச் சேர்ந்து கடலுக்குள் விளையாடி மகிழ்ந்தபடியிருந்தனர்.

தற்போது நாட்டில் நிலவும் அமைதி நிலையைப் பயன்படுத்தி தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் யாழ் குடாநாட்டை நோக்கிய பிரசன்னம் என்பது அதிகமாகக் காணப்படுவதால் யாழ்ப்பாணத்திற்கான தமது நிகழ்ச்சி நிரலில் கசூரினாக் கடற்கரைக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

இம் மண்ணில் பிறந்தவர்களை விட தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. அவர்கள் சந்தோசக்களிப்பில் கடலில் நீந்தி விளையாடிபடி இருந்தனர். எங்களுக்கிருக்கும் வேதனையை யாரறிவார்? என்று என் மனம் உள்ளூர நினைத்து வேதனைப்பட்டது. என்ன செய்யலாம் எம் இனத்தின் தலைவிதி அப்படி! என நொந்தபடி எனது கவனத்தை திருப்பினேன்.

அந்த நேரம் காரைநகர் பிரதேச சபை ஊழியர் அங்கு வருகை தந்திருந்தவர்களின் வாகனங்களுக்கு வாடகைப்பணம் வசூலித்துக் கொண்டிருந்தார். அவர் தினம்தோறும் வருபவர் என்பதால் இங்கு இடம்பெறும் கலாசார துர்நடத்தைகள் பற்றி நன்கு அறிந்திருப்பார் என்பதால் அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். "என்ன அண்ணா இஞ்ச உப்படியெல்லாம் நடக்குது நீங்க என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீங்கள்?" என்ற எனது வாதத்திற்கு அவர் என்னுடன் எதிர்வாதம் புரிந்தார். "தம்பி நாம் என்ன செய்ய முடியும்? தினம் தினம் உப்புடியான பல சம்பவங்கள் இங்கே நடந்து கொண்டுதான் இருக்கு! முதலில் இதுகளைக் கட்டுப்படுத்தித் தான் பார்த்தம். ஆனால் இதுகள் குறைந்த பாடில்லை. பிறகு எமக்கு ஏன் வீண்வேலை என்று விட்டுட்டம்".

சமூகப் பொறுப்பற்ற அவரின் பேச்சு என்னைக் கோபத்தில் ஆழ்த்தியது. "என்னண்ணை உப்புடிச் சொல்லுகிறீங்கள். உங்கட பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கேக்க நீங்கள் இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்தலாம்தானே'' என்ற நியாயமான கேள்விகளுக்கு அவர் "இல்லை தம்பி எங்கட அதிகார வரம்பிற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்ககைளையும் எடுத்துப்போட்டம். ஆனால் ....' 'என்று அவரது உரையாடல் நீண்டு சென்றுகொண்டிருக்கையில் எதிரில் ஒரு வயதான பெரியவர் வந்தார். அவரை எனக்கு எங்கோ பார்த்த ஞாபகம். "தம்பி! பாத்தியோ இங்கே என்ன நடக்குது எண்டு. முந்தியெல்லாம் எப்படி எமது சமூகம் கட்டுப்பாடாக ஒழுக்கம் மிகுந்ததாக இருந்ததது எண்டு உனக்குத் தெரியும்தானே. நான் சொல்லத்தேவையில்லை.

இப்ப காலம் மாறிப்போச்சு. தமிழரின்ர சிவில் நிர்வாகம் எல்லாமே குழம்பிப்போச்சு. பெரியவர்களின் சொல்லை இன்றைய இளம்சந்ததி கேட்குதே? உதுகளைத் திருத்தப்போனால் நாம் தான் வம்பில் மாட்டவேணும்'' என்று தன்னை நொந்தவாறு கூறினார்.

"என்ன செய்யிறது ஐயா! எல்லாம் அவன் செயல்: எங்கட கெட்ட காலம். எல்லாமே தலைகீழாய்ப் போச்சுப்பாருங்கோ என்று அப்பெரியவரைத் தேற்றியவாறு இருக்கஇசில இளைஞர்கள் நாலைந்து பல்சர்களில் உறுமியவாறு பெரும் அட்டகாசமான ஆர்ப்பரிப்புடன் வந்தனர். அவர்களின் கைகளில் மதுப்போத்தல்கள் தவழ்ந்துகொண்டிருந்தன. தாம் கொண்டுவந்திருந்த மதுப்போத்தல்களை உடைத்து மதுவைத் தமது வாய்க்குள் ஊற்றினர். மதுவால் வயிற்றை நிறைத்தவுடன் மதுப்போத்தல்களை வீசிவிட்டு கடலுக்குள் இறங்கி கும்மாளமிட்டனர்.

தமது கும்மாளத்துடன் மட்டும் அவர்களது செயற்பாடுகள் நிற்கவில்லை. மது தந்த போதையில் அவர்களின் செயற்பாடுகள் எல்லை மீறியது. அங்கு வந்திருந்த இளம் பெண்களைச் சீண்டினர். தட்டிக் கேட்டவர்களுடன் அடிதடியில் இறங்கினர். அவர்களின் கெட்ட வார்த்தைப் பிரயோகங்கள், ஆபாசமான பேச்சுக்கள் என்பன உச்ச தொனியில் அமைந்திருந்தன. இதனால் அங்கு நின்றோரை முகம் சுழிக்க வைத்தது. அங்கு நின்ற தென்னிலங்கைப் பயணிகளையும் விசனத்தில் ஆழ்த்தியது. அந்தளவிற்கு அவர்களின் அட்டகாசம் தூள்கிளப்பியது.

"தம்பி உப்படிச் சம்பவங்கள் இங்க தாராளமாய் நடக்குது. யாரிட்டச் சொல்லுறது எண்டு தெரியல்ல. அப்படி சம்பந்தப்பட்டாக்களிட்ட சொன்னாலும் எதுவித நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை'' எனச் சொல்லி அந்தப் பெரியார் கவலைப்பட்டார்.

தற்போது தென்னிலங்கைப் பயணிகளும் அதிகளவில் கூடும் இடமாக கசூரினாக் கடற்கரை விளங்குகின்றது. யாழ்ப்பாணத்தின் எழிலை பறைசாற்றும் இடமாக இக்கடற்கரை திகழ்கின்றது. அக்கடற்கரையின் எழிலை பருகுவதற்கென தினந்தோறும் ஏராளமானோர் சங்கமிக்கும் அந்த அழகிய இடத்தை மாசுறச் செய்யும் கைங்கரியங்களில் சிலர் ஈடுபடுவது வேதனை தருகிறது.

தமிழரின் கலாசாரத்தின் நடுநாயகமாகத் திகழும் யாழ்ப்பாணத்தில் எம்மவர்கள் நிகழ்த்துகின்ற அலங்கோலத் திருவிழாக்கள் இங்கு நடைபெறும் கலாசாரச் சீர்கேட்டை அப்படியே தோலுரித்துக் காட்டுகின்றன. பன்னெடுங்காலமாகப் பேணிக்காக்கப்பட்டு வந்த தமிழரின் கலசாரப் பாரம்பரியங்கள் ஒழுக்க விழுமியங்கள் எல்லாம் எம் கண்முன்னே அழிந்தொழிந்து போவதை சமூகப் பிரக்ஞை உடையவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. எனவேதான் எமது பண்பாட்டு விழுமியங்களை அழியவிடாது தடுப்பதற்கும் மேலும் சிதையவிடாது காப்பதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் தலையிட வேண்டும் என்பதே சமூக பொறுப்புள்ளவர்களின் அவசர அவசியத்தேவையாக உள்ளது. செய்வீர்களா?

No comments:

Post a Comment