பகைவர்கள் இல்லாத இடத்தில்தான் பயம் இல்லாமல் வாழலாம். பகைவர்களும் தீயவர்களும் இருக்கும் இடத்தில்தான் நமக்கு ஆபத்துக்களைத் தோற்றுவிக்கக் கூடிய வாய்ப்புகளும் அதிகமாகின்றன. எனவே, நாம் ஆபத்துகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகாமல் வாழ விரும்பினால், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரையும் நல்லவர்களாக்கி விடுவதுதான் அதற்குரிய ஒரே வழி.
அவர்கள் நல்லவர்களே என்றும், அவர்கள் நமது நண்பர்களே என்றும், நாம் உளமார நம்பும் போதும், பழகும் போதும், அதை வெளிப்படுத்தும் போதும் அவர்கள் உண்மையிலேயே நமக்கு நல்லவர்களாகவும், நண்பர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.
ஆனால், ‘ஒருவன் தீயவன் என்று கண்கூடாகத் தெரியும் போது, அவனை நல்லவன் என்று எப்படி நம்பமுடியும்?’ தீயனை நல்லவன் என்று நம்புவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகாதா?’ என்று கேட்கப்படலாம்.
உலகில் நூற்றுக்கு நூறு நல்லவர்களும் கிடையாது. நூற்றுக்கு நூறு தீயவர்களும் கிடையாது. ஒவ்வொரு மனித னிடத்திலும் நற்குணங்களும் தீக்குணங்களும் கலந்தே இருக்கும் நற்குணங்கள் பெரும்பான்மையாகவும், தீக்குணங்கள் சிறுபான்மையாகவும் உள்ள மனிதர்களை நாம் நல்லவர்கள் என்கிறோம்.
அதேபோல், தீக்குணங்கள் பெரும்பான்மையாகவும், நற்குணங்கள் சிறுபான்மையாகவும் உள்ள மனிதர்களை நாம் தீயவர்கள் என்கிறோம். நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இவ்வளவுதான் வேறுபாடு.
மிகச் சிறந்த பெரியவர்கள் என்று போற்றப்படுகிற நல்லவர்களிடத்திலும் கூட, ஏதேனும் ஒரு சில தீயகுணங்கள் இருக்கத்தான் செய்யும். அது போலவே, மிகச் கொடிய தீயவர்கள் என்று தூற்றப்படுகிற இழி தகையினரிடத்திலும், ஏதேனும் ஒன்றிரண்டு உயர் பண்புகள் காணப்படுவது இயல்பு.
அந்த ஒன்றிரண்டு உயர் பண்புகளை மட்டும் கருத்திற்கொண்டு, (மற்ற தீய பண்புகளையெல்லாம் நினைவிற்கொள்ளாமல்) அவர்களோடு நாம் நெருங்கிப் பழகுவோமாயின், அவர்கள் நம்மைப் பொறுத்தவரையில் நல்லவர்களாக நடந்து கொள்வார்கள் என்பது மட்டுமல்ல; நாளடைவில் தம்முடைய தீய பண்புகளிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு உலகத்திற்கும் அவர்கள் நல்லவர்களாகி விடுகிறார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.
அவ்வாறே, பெரியவர்களிடம் காணப்படுகிற ஒன்றிரண்டு இழி பண்புகளையே நாம் அடிக்கடி நினைவு கூர்ந்து அவர்களோடு நெருங்கிப் பழகி வருவோமாயின், நம்மைப் பொறுத்தவரையில் அவர்கள் மேலும் மேலும் இழிதகையினராகவே நடந்து கொள்வார்கள்.
அது மட்டுமல்ல; அவர்களுடைய நற்குணங்கள் எல்லாம் நாளடைவில் சிறிது சிறிதாக மங்கி மறைந்து, முடிவில் நமக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே அவர்கள் தீயவர்களாக மாறிவிடுகிறார்கள்.
No comments:
Post a Comment