Monday, November 15, 2010

பிள்ளைகளின் அவதானிக்கும் திறனை எவ்வாறு வளர்க்கலாம்?

பச்சிளம் குழந்தை தன் தாய் தனதருகில் இருப்பது, இல்லா திருப்பது பற்றி உணர்ந்து கொள்ளும் தாயின் வெப்பத்தைக் குழந்தை உணர்ந்து கொள்கிறது. தாயின் அன்பான வார்த்தைகளைக் குழந்தை செவி மடுக்கிறது. தாயின் பால் மணத் திற்குப் பழகும் குழந்தை வாயினால் தாயின் மார்பைச் சுவைக்கும் போது ஊற்றெடுக்கும் தாய்ப் பாலின் சுவையையும் பழகிக்கொள்கிறது.

படிப் படியாகத் தன் தாயை மற்றவரிடமிருந்து வேறுபடுத்தி இனங்கண்டுகொள்கிறது. தாயின் பிடியும், அரவணைப்பும் குழந்தைக்கு இதமளிக்கிறது. மற்றவர்கள் தூக்கும்போது வீரிட்டு அழுகின்றது. தாயைக் காணும் போதெல்லாம் குழந்தை தன் சந்தோஷத்தை வெளிக்காட்டச் சிரிக்கின்றது.

தாயின் வெப்பத்தை தொடுகையினால் சருமத்தின் மூலமும், அன்பான வார்த்தைகளைக் கேட்பதனால் செவிகளின் மூலமும் பால் மணத்தை மணப்பதன் மூலம் மூக்கினாலும் பாற் சுவையை சுவைப்பதன் மூலம் நாக்கினாலும் தாயின் உருவத்தைக் பார்ப்பதன் மூலம் கண்களினாலும் அறிந்துகொள்கின்றது.

குழந்தை தன் தாயை இனங்கண்டது போல தனது அவயங்களில் ஒன்றையோ அல்லது இரண்டையோ அல்லது பல அவயங்களையோ பயன்படுத்திச் சூழல் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும்.

இவ்வாறு குறிப்பிட்ட நோக்கத்துக்காக உறுப்புகளைப் பயன்படுத்தி தகவல்களைப் பெற்றுக் கொள்ளல் அவதானித்தல் எனப்படும்.

நாய்களும், பூனைகளும் மோப்பத்தினால் வேட்டையாடுகின்றன. பருந்து, ஆந்தை போன்றவை தமது கூரிய கண்களி னல் மிகச் சிறிய இரைக ளைக் கூட இனங்கண்டு கொள்கின்றன. இரவில் பறந்து செல்லும் வண்டு களை இரையாக்கிக் கொள்ளும் வெளவால்கள் தமது இரைகளை இனங்கான ஒலி அலைகளைப் பயன்படுத்துகின்றன.

பிள்ளைகளிடம் காணப்படும் அவதானிப்புத் திறனை வளர்க்க வேண்டிய வழிகாட்டலை வழங்க வேண்டியது பெற்றாரினதும், ஆசிரியரினதும் முக்கிய கடமையாகும்.

சிறு பராயத்திலிருந்தே தனது சுற்றாடலிலிருந்த விலங்குகளையும், பட்சிகளையும் அவதானிப்பதில் சாள்ஸ் டார்வின் பெரும் ஆவலுடை யவராயிருந்தார். அவரது நீண்டகால அவதானிப்பு ‘கூர்ப்பு’ பற்றிய கொள்கைக்கு வித்திட்டது.

சேர் ஐசாக் நியூற்றன் பொருட்களின் இயக்கம். பொருட்கள் நிலத்தில் விழுதல் போன்றவற்றை ஆராய்ந்தறிவதற்காக அவதானிப்பைப் பயன்படுத் தினார். இதனடிப்படையில் அவரினால் வெளியிடப்பட்ட கோட்பாடுகளின் உண்மை உலகினரால் இன்றும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

அகிலத்திலுள்ள எல்லாப் பதார்த்தங்களும் ஒன்றையொன்று கவரத்தக்கவாறு அமையும் ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ளது என உலகிற்கு முதன் முதல் வெளிப்படுத்தியவர் இப்பேரறிஞரே. இவர் தனது அவதானிக்கும் திறனை தேவையான அளவிற்கு வளர்த்தமையால்தான் இவ்வாறு கண்டுபிடிக்க முடிந்தது.

சிறந்ததோர் அவதானிப்பாளரின் இயல்புகள்

1. பார்வையாளர் மாத்திரமல்ல. குறிக்கோளுடன் தக்கவாறு ஐம்புலன்களைப் பயன்படுத்தி முடிந்த எல்லாச் சந்தர்ப்பங்களையும் அவதானிப்புக்காகப் பயன்படுத்துபவர்.

2. சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாடுடையவர். தான் செய்தவற்றை அடிக்கடி சீர்தூக்கிப் பார்ப்பவர்.

3. தான் அவதானித்தவற்றைச் சீராகவும் முறையாகவும் அட்டவணைப்படுத்துவார். குறிப்பெடுத்துக்கொள்வார், அறிக்கைப்படுத்துவார்.

4. தனது அவதானிப்புக்களைப் பிழையறப் பெறுவதற்காகத் தேவையான தகுந்த நுட்ப முறைகளைப் பயன்படுத்துவார்.

5. பொறுமையுள்ளவர்.

6. தனது அவதானிப்பை முடித்துக்கொள்ளும் அவசரத்தில் அவசர முடிவுகளுக்கு வருபவரல்லர்.

7. முறையாகச் செயல்படுபவர். எப்போதும் எல்லா விடயங்கள் தொடர்பாகவும் நன்றாகச் சிந்தித்துப் பார்ப்பார்.

8. தான் அவதானித்தவற்றை மற்றவர்க்கு எடுத்தியம்புவதில் வல்லவர். இதற்காக குறிப்புகள், அறிக்கைகள் வரைபுகள், படங்கள் சேகரித்த மாதிரிகள், நிழற் படங்கள் மாதிரி உருக்கள், பதிவு நாடாக்கள் முதலியவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றவர்.

அவதானிப்பு ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ளும் அதே சமயம் ஆற்றல்களினால் உச்சப் பயனைப் பெற விளைதலும் முக்கியமானதாகும்.
பின்பற்றல் வழியே கற்றல் Learning by imitation வேறோர் உயிரியின் செயலைப் பார்த்து அதனைப் பின்பற்றிக் கற்றலும் ஒருவகைக் கற்றலாகும். பின்பற்றல் வழியே கற்றல் பெரும்பாலும் மனிதரிடத்தில் காணப்படுகின்றது. பின்பற்றல் எனப்படும் பொதுவான ஒரு போக்கு குழந்தைகளிடம் இயல்பாக உள்ளது.

இது பலவற்றைக் கற்க குழந்தைகளுக்கு உதவுகிறது. தாய் மொழியினைப் பேசக் கற்கும் குழந்தை பிறர் பேசுவதைக் கேட்டு அச்சொல் ஒலிகளைப் பின்பற்றித் தானும் அவ்வாறு ஒலித்துக் கற்கிறது. எழுதுவது, விளையாடு வது போன்ற செயல், திறன்களும் (Skills)  பிறரது செயல்களைக் கூர்ந்து கவனித்து அவற்றைப் பின்பற்றுவதன் வழியே குழந்தையால் கற்கப்படுகின் றன.

நல்லவை, தீயவை எனப் பிரித்தறியும் ஒழுக்கம் பற்றிய அடிப்படை மனப்பான்மைகளும், சமுதாயத்தில் பயன் தரத்தக்க ஒத்துழைப்பு, சகிப்புத் தன்மை போன்ற மனப்பான்மைகளும் பிறரைப் பின்பற்றியே குழந்தையால் கற்கப்படுகின்றன. எனவே தான் இத்தகைய துறைகளில் பின்பற்றிக் கற்றல் நல்ல விளைவுகளைத் தோற்று விக்க உதவும். சிறப்பான முன்மாதிரி களைக் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துவதுடன் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தாமே குழந்தைகள் பின் பற்றிப் பயன்பெறத்தக்க முன் மாதிரிகளாக விளங்குதல் இன்றியமையாதது.

பின்பற்றல் வழியே கற்றல் பற்றி பண்டுரா (Bandura) என்னும் சமூக உளநூலறிஞர் பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார். சமுதாயத்தின் உறுப்பினர்களிடையே எழும் இடைவினையும் பின்பற்றலும் தோற்றுவிக்கும் ஒருவிளைவாகக் கற்றலை பண்டுரா விளக்குகிறார்.

குழந்தைகள் கற்கும் நடத்தையின் பெரும் பகுதி அவர்களது பெற்றோர்கள். ஆசிரியர்கள் நண்பர்கள், மதிப்புமிக்க பெரியோர்கள் போன்றோரை உற்றுநோக்கி, அவதானித்து அவர்களின் நடத்தையைப் பின்பற்றுவதினின்றும் எழுவதாகும். ஏற்கனவே ஒருவரிடம் காணப்படும் நடத்தையை மாற்றுவதுடன் முன்னர் கற்கப்படாத புதிய நடத்தை முறைகளையும் கற்கத் துணை செய்யும்.

பின்பற்றிக் கற்றல் குழந்தைகளிடம் காணப்படும் நடத்தையைச் சில போது வலுப்படுத்துவதாகவும் சில போது அதனைத் தடை செய்வதாகவும் அமையக் கூடும். குழந்தைகளின் சமூகவியல் பின் வளர்ச்சியில் ஆசிரியரின் வகுப்பறை முகாமைத்துவம், நடத்தை பெரும் பங்கு வகிக்கிறது. ஆசிரியரின் நடத்தை சிறப்பான முன் மாதிரியாக இருப்பின் குழந்தைகள் சமூகப் பண்டிகைகளைக் கற்பது எளிதாகிவிடும்.

செயற்திட்டம்

நீங்கள் நல்ல அவதானிப்பாளராயின் உங்கள் அவதானிப்பு ஆற்றலை வேறு துறைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். செயற்திட்டம் அவ்வாறான தொன்றாகும். குறிப்பிட்டதோர் செயலை அல்லது நிகழ்வினைப் பற்றிய ஆய்வும், அவதானிப்பும் செயற்றிட்டம் என அழைக்கப்படுகிறது. அவதானம் தொடர்பான திறனில் நிபுணத்துவம் அடைவதற்கு செயற்றிட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

செயற்றிட்டங்களின் வாயிலாக பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் திறன்கள்

1. அவதானிக்கும் ஆற்றல் மேம்பாடடைதல்
2. அறிக்கைப்படுத்தும் ஆற்றல் வளர்ச்சியடைதல்
3. கருவிகளையும் உபகரணங்களையும் கையாளும் திறன் வளர்ச்சியடைதல்
4. அளிக்கும் ஆற்றல் வளர்ச்சியடைதல்
5. தொடர்பாடலின் ஆற்றல் ஏற்படல்
6. குழுவாகக் கருமமாற்றும் ஆற்றல் வளர்ச்சியடைதல்
7. பொறுப்புக்களை ஏற்கும் ஆற்றல் அதிகரித்தல்
8. செயல் ஒன்றை இறுதி வரை செய்து முடித்தல் வேண்டும் எனும் எண்ணம் ஏற்படுகிறது.

ஆய்வுகள் (Survey)

பல செயற்றிட்டங்களின் பின் அதனடிப்படையில் நாம் பெறும் அறிவுத் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆய்வுகளில் ஈடுபடும் சந்தர்ப்பம் ஏற்படும்.

இயற்கைச் சுற்றாடலின் நாற்காட்டி (Nature’s Calander)  நாள் தோறும் அவதானிக்கும் இயற்கை நிகழ்வுகளைச் சுருக்கமாக அறிக்கைப்படுத்துதல் இதன் நோக்கமாகும். கால நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும், தாவரங்களினதும், விலங்குகளினதும் அன்றாட நிகழ்வுகள் இவற்றில் அடங்கும்.

இயற்கை நாட் குறிப்பேடு Natural Diary

அவதானித்தல், அறிக்கைப்படுத்தல் போன்ற ஆற்றல்களை வளர்ப்பதற்கும், கட்டுரைகள் சித்திரங்கள், கவிதைகள், வரைபுகள், அட்டவணைகள் ஆகியவற்றின் மூலம் கருத்துத் தெரிவிக்கும் ஆற்றலைப் பெற்றுக் கொள்வதற்கும் இயற்கை நாட்குறிப்பேடு உதவுகின்றது.

மாதிரிகளைச் சேகரித்தல்

பறவைகள், சிறகுகள், வித்துக்கள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டினங்கள், மிருகங்களின் படங்கள், முத்திரைகள், சிப்பி சோதி பலவகைக் கனிப் பொருட்கள் மண் மாதிரிகள், சிறு விலங்குகளின் கூடுதல் சிதைந்த உடல்கள், இலைகள் போன்றவற்றை சேகரிக்கத் தூண்டலாம்.

செய்து கற்றல்Learning by doing கேட்பதை மறக்கிறோம். பார்ப்பதை நினைவு கொள்கிறோம். செய்வதைத் தெரிந்துகொள்கிறோம். செயலில் ஈடுபடுவதால் அதனை நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது. நேரடி அனுபவத்தையும், பயிற்சியையும் பெறக்கூடியதாய் இருக்கிறது.

‘புலனுறுப்பை அல்லது புலனுறுப்புகளை ஈடுபடுத்தி குறித்த நோக்கத்துடன் நிகழ்வொன்றை அல்லது யாதாயினுமொன்றைப் பற்றிய தகவல்களைப் பெறுதல் அவதானித்தல் எனப்படும்’ ஆகவே எதிர்கால சந்ததியினரான இன்றைய இளய தலைமுறையினரை எல்லா விடயங்களிலும் அவதானிக்கும் திறனை வளர்க்கப் பாடுபடுவோம்.

No comments:

Post a Comment