குழந்தைகள் பிறக்கும் போதே பல திறமைகளுடனும், பலவீனங்களுடனும் பிறக்கிறார்கள். அவர்கள் அவர்களுக்கே உரிய தனித் திறமைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பெற்றோர்களாக, அவர்கள் எதில் வல்லவர்களாக உள்ளார்கள் என்று அறிந்து அந்த திறமைகளை ஊக்கப்படுத்தி வளர்க்க வேண்டியது நமக்கு மிகவும் அவசியம். இந்தப் பகுதியில் அவர்களது படிப்பில் நாம் கவனம் செலுத்த இருக்கிறோம். படிப்பில் கவனமின்றி இருக்கும் குழந்தைகளைக் கையாளத் தேவையான ஆலோசனைகளை இங்கு பார்ப்போம். அவர்களுடைய செயல்திறனை அதிகரிக்கத் தேவையான படிப்படியான வழிமுறைகளையும் பார்க்கலாம்.
கல்வி குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான விஷயம். அவர்களின் நல்ல எதிர்காலத்தினை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவது கல்வி. எனவே கல்வியில் அவர்கள் திறமையுடன் செயல்படுவதை உறுதி செய்வது பெற்றோர்களான நமக்கு மிகவும் முக்கியம். குழந்தைகளின் படிப்பைக் கையாள்வதே மிகவும் சிக்கலாக உள்ள பெற்றோர்களுக்கு இந்த ஆலோசனைகள் எவ்வாறு உதவும் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஆசிரியரோடு பேசுங்கள்
கொஞ்சம் அதிகம் அக்கறை எடுத்து குழந்தையின் ஆசிரியரிடம் பேசுங்கள். அவர்கள் வகுப்பில் எவ்வாறு நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதையும் குழந்தையின் செயல்திறன் எப்படி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இது பெற்றோர் முதலில் செய்ய வேண்டிய வேலைகளில் ஒன்று.
குழந்தையுடன் அடிக்கடி பேசுங்கள்
குழந்தையிடம் பள்ளியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அடிக்கடி விசாரியுங்கள். அதற்கு கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறுங்கள். உங்கள் குழந்தை நன்கு செயல்படுவதற்கு முன் கல்வியைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பிற ஆர்வங்களை ஊக்குவியுங்கள்
நாள் முழுவதும் படிக்கச் சொல்வதால் மட்டும் உங்கள் குழந்தை நன்றாகப் படிக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிடித்தமான பிற ஆர்வமூட்டக்கூடிய செயல்களை கண்டறிந்து அவற்றை ஊக்குவிப்பதும், அவர்கள் அதில் ஈடுபடச் செய்வதும் மிகவும் முக்கியமான ஒன்று என்பதை உணருங்கள்.

No comments:
Post a Comment