Thursday, January 16, 2014

தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்குமென்பது இந்துக்களின் நம்பிக்கை

தைப்பூசம் இன்று அனுஷ்டிப்பு

தை மாதத்தில் பல சிறப்புக்கள் பொருந்தி வரும் பூச நட்சத்திரம் தைப்பூச நாளாகும். இந்நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும். தேவர்களின் குருவாகிய பிருகஸ்பதி பூச நட்சத்திரத்தின் தேவதை என்பர். பிருகஸ்பதி அறிவின் தேவதை என இந்துக்கள் நம்புவதால் பூச நட்சத்திரத்தை வணங்கினால் பிருகஸ்பதியின் அருள் கிடைக்கும் என்பர்.


பூச நட்சத்திரம் பெளர்ணமியுடன் கூடிய நாளாக அமைவது சிறப்புடையது. இந்நாளை இந்துக்கள் தைப்பூச நன்னாளாகவும் இறை வழிபாட்டுக்கும் மற்றும் நற்காரியங்களின் தொடக்கத்திற்கும் வெற்றிபொருந்திய இறை சக்தி மிக்க நாளாகவும் போற்றிக்கொண்டாடுகின்றனர்.

27 நட்சத்திரங்களின் வரிசையில் எட்டாவது நட்சத்திரமாக பொருந்தியிருப்பது இந்த பூச நட்சத்திரமாகும். தை மாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பமாகும். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுதென்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.
இந்த தைப்பூசத் திருநாளில் தான் உலகம் சிருஷ்டிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்நாளில் தான் சிவசக்தி ஐக்கியம் நிகழ்ந்ததாகவும் கொள்ளப்படுகிறது. அதாவது சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை எனக் கூறப்படுகிறது. சிவனும் சக்தியும் இணைந்ததன் காரணத்தாலேயே உலகப் படைப்புக்கள் தோற்றம் பெற்று இயக்கம் நிகழ்கிறது என்பது புராணக் கதைகளின் பொருளாக அமைகிறது.

சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதல் உருவானது நீர் என்றும் அதனைத் தொடர்ந்து நிலம் தோன்றியதாகவும் பின் நெருப்பு, காற்று ஐந்தாவதாக ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் சிருஷ்டிக்கப்பட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. அந்த வகையில் பஞ்ச பூதங்களின் தோற்றத்திற்கும், இயக்கத்திற்கும் வழிகோலிய புனிதமிகு நாளாக இந்துக்கள் தைப்பூசத்தைப் போற்றி வழிபாடு செய்கின்றனர்.

இத்தைப்பூச நன்னாளானது பல சிறப்புக்கள் பொருந்திய விசேட நாளில் பல இறை தத்துவங்கள் உலகிற்கு உணர்த்திய தினமாகவும் இந்துக்களால் நம்பப்படுகின்றது. அந்த வகையில் பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபெருமான் சிவதாண்டவமாடி காணும்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குவதுடன் வாயு பகவானும், வர்ண பகவானும், அக்கினி பகவானும் சிவபெருமானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் கூறப்படுகிறது.

இயற்கையை கட்டுப்படுத்தும் சகல வல்லமை பொருந்திய சக்தியாக இறைவனே உள்ளான் என்ற உண்மை உணர்த்தப்பட்ட நாளாக இருப்பதுடன் சிவனுக்கு சிறப்பு மிக்க நாட்களில் ஒன்றாக தைப்பூசம் கருதப்படுகிறது. முருகப் பெருமானுக்கும் சிறப்பு பொருந்திய விசேட நாளாக இந்த தைப்பூச தினம் அமைந்துள்ளது.

அதாவது சிவசக்தி ஐக்கியமாகிய முருகப்பெருமான் அன்னையாகிய உமாதேவியிடம் இருந்து ஞானவேல் கையேற்ற திருநாளாகவும் இத்தைப்பூச திருநாள் சிறப்புப் பெறுகிறது. இத்தினத்தில் உலகமெங்கும் உள்ள முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது வாழ்க்கையில் நம்பிக்கையாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் உலக இயக்கத்திற்கு காரண கருத்தாவாக இருக்கும் சூரிய பகவானுக்கு பொங்கல் இட்டு நன்றி கூறிய கையோடு அடுத்து நாம் இறை வழிபாட்டுக்காக காத்திருப்பது இந்த தைப்பூசத் திருநாளை ஆகும். மனிதர்கள் பல்வேறுபட்ட துன்ப துயரங்களில் இருந்து விடுதலை பெறும் நோக்கத்துடன் மெய்யன்புடன் இறைவனை நோக்கி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதுடன் பாவ வினைகளை நீக்கும் புண்ணிய நதிகளில் இத்தைப்பூச நன்னாளில் நீராடுவது சிறப்பு மிக்க ஒன்றாகும். அவ்வாறு முடியாதவிடத்து புண்ணிய நதிகளை மனதில் நினைத்து நீராடுவதும் சிறப்பு.

வாழ்வில் ஒளிபெறும் விதத்தில் இத் தைப்பூச திருநாளில் தான தருமங்கள் செய்து நல்ல காரியங்களை தொடங்கும் நாளாகவும் இந்நாள் சிறப்பு பெறுவதுடன் ‘தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்’ என்பர். அந்த வகையில் குழந்தைகளுக்கு விஜய தசமியன்று ஏடு தொடங்க தவறியவர்கள் தங்களது குழந்தைகளுக்கு இத்தினத்தில் ஏடு தொடங்க முடியும். அத்துடன் புதிர் எடுத்தல், புதிதுண்ணல், பெண் குழந்தைகளுக்கு காது, மூக்கு குத்துதல் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளல் போன்ற நற் செயல்கள் ஆரம்பிப்பதற்கு தைப்பூசம் சிறப்பு பொருந்திய இறையருளுடன் கூடிய நல்ல சிந்தனைகளுக்கு ஜெயம் தந்து தொய்வின்றி இனிதே எல்லா நற் செயல்களும் நிறைவு பெறும் என்பது இந்துக்கள் கொண்டுள்ள அசையாத நம்பிக்கையாகும்.

இந்த தைப்பூச நன்னாளின் பெருமைகள் பற்றி திருஞானசம்பந்த சுவாமிகள் அவருடைய தேவார பதிகம் ஒன்றில் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

தைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க ணேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

இவ்வாறு பல சிறப்பு வாய்ந்த இந்த தைப்பூச திருநாளில் ஆலய தரிசனங்கள் செய்து விரதங்கள், தலயாத்திரைகள் மேற்கொள்வோரும், மனச் சுத்தியுடன் இறைவனை நினைத்து இறை பஜனைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்வோர் அனைவரும் அனைத்து விதமான பாவங்களும் நீக்கப்பெற்று இறையருளால் நலமாக வாழ்வர் என்பது தைப்பூச நன்னாளின் பெருமையாக உள்ளது.

No comments:

Post a Comment